கோடை விடுமுறைக்குப்பின் இன்று முதல் முழுமையாக இயங்குகிறது சுப்ரீம் கோர்ட்டு

கோடை விடுமுறைக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்குகிறது.

புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட்டுக்கு கடந்த 42 நாட்கள் ேகாடை விடுமுறை விடப்பட்டு இருந்தது. இந்த நாட்களில் பல்வேறு விடுமுறை கால சிறப்பு அமர்வுகளில் அவசர வழக்குகள் விசாரிக்கப்பட்டன.
அந்தவகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு இருந்தன. இதில் 700-க்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் சுப்ரீம் கோர்ட்டில் 3 நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். நீதிபதி கே.எம்.ஜோசப், நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் முறையே கடந்த மாதம் 16, 17 மற்றும் 29-ந்தேதிகளில் ஓய்வு பெற்றனர்.

இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆக குறைந்துள்ளது. மற்றொரு மூத்த நீதிபதி கிருஷ்ண முராரி வருகிற 8-ந்தேதி ஓய்வு பெறுகிறார். நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் அஜய் ரஸ்தோகி இருவரும் கொலீஜியத்திலும் இடம்பிடித்திருந்தனர். அவர்கள் தற்போது ஓய்வு பெற்றிருப்பதால், நீதிபதிகள் கவாய், சூர்யகாந்த் இருவரும் கொலீஜியத்தில் இணைக்கப்பட்டு உள்ளனர்.
மணிப்பூர் கலவர வழக்கு இந்த நிலையில் கோடை விடுமுறைக்குப்பின் சுப்ரீம் கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) முதல் முழுமையாக இயங்க உள்ளது. இதில் பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படுகின்றன.
இதில் முக்கியமாக, நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பி இருக்கும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுக்கிறது. இதைப்போல ஆண்களுக்காக தேசிய ஆணையம் அமைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ள பொதுநல மனுவும் விசாரணைக்கு வருகிறது. பில்கிஸ் பானு வழக்கு இவற்றைத்தவிர சுப்ரீம் கோர்ட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தேர்தல் பத்திர திட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை உள்ளிட்ட வழக்குகளும் வருகிற நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் தீர்ப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *