ஆஸ்திரேலியா – இங்கிலாந்து மோதும் ஆஷஸ் டெஸ்ட் இன்று தொடக்கம்
ஆஸ்திரேலியா-இங்கிலாந்தும் மோதும் ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது.
பர்மிங்காம், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது.
ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு டெஸ்ட் கிரிக்கெட் தொடராகும். ஆஷஸ் கவுரவத்துக்காக களத்தில் இவ்விரு அணி வீரர்களும் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு.
குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஆஷஸ் தொடரை 34 முறை ஆஸ்திரேலியாவும், 32 முறை இங்கிலாந்தும் கைப்பற்றியுள்ளன. 6 தொடர் ‘டிரா’வில் முடிந்துள்ளது. கடைசியாக 2021-22-ம் ஆண்டில் சொந்த மண்ணில் நடந்த ஆஷஸ் கோப்பையை 4-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா சொந்தமாக்கியது. ஆனால் இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது இங்கிலாந்து மண்ணில் 2001-ம் ஆண்டுக்கு பிறகு ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா வென்றது கிடையாது. தற்போதைய ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். மிரட்டுமா ஸ்டோக்ஸ்- மெக்கல்லம் கூட்டணி? பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டையும் ஒரு நாள் போட்டி போன்று அதிரடியாக விளையாடுகிறது. ‘டிரா’வை நோக்கி நகரும் போட்டிகளிலும் கூட ‘ரிஸ்க்’ எடுத்து விளையாடி முடிவை கொண்டு வந்து விடுகிறார்கள். பென் ஸ்டோக்ஸ்- பயிற்சியாளர் பிரன்டன் மெக்கல்லம் கூட்டணி சேர்ந்த பிறகு இங்கிலாந்து அணி 13 டெஸ்டில் விளையாடி 11-ல் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு முந்தைய 17 டெஸ்டுகளை எடுத்துக் கொண்டால் அதில் இங்கிலாந்து ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, டக்கெட், ஹாரி புரூக் என்று இங்கிலாந்து அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். மூத்த வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆஸ்திரேலியாவை சீர்குலைக்கும் நம்பிக்கையுடன் ஆயத்தமாகி வருகிறார்கள். 40 வயதான ஆண்டர்சனுக்கு இது 180-வது டெஸ்டாகும். அவர் இன்னும் 15 விக்கெட் வீழ்த்தினால் 700 விக்கெட் மைல்கல்லை அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஓய்வில் இருந்து விடுபட்ட சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி 2021-ம் ஆண்டுக்கு பிறகு டெஸ்டில் அடியெடுத்து வைக்கிறார். முட்டிவலி பிரச்சினையால் அவதிப்படும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங் செய்வாரா? என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் பந்து வீசுவதற்கு ஏற்ப உடல்தகுதியுடன் இருப்பதாக ஸ்டோக்ஸ் நேற்று பேட்டியின் போது தெரிவித்தார். இது இங்கிலாந்தின் பந்து வீச்சுக்கு மேலும் வலு சேர்க்கும். உள்ளூரில் ஆடுவது இங்கிலாந்துக்கு இன்னொரு சாதகமான அம்சமாகும். கடந்த முறை ஆஸ்திரேலியாவில் 0-4 என்ற கணக்கில் உதை வாங்கிய இங்கிலாந்து அதற்கு பழிதீர்க்க வரிந்து கட்டி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸ்திரேலிய அணி அண்மையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிசுற்றில் இந்தியாவை தோற்கடித்து மகுடம் சூடிய உற்சாகத்துடன் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் போட்டியில் களம் காணுகிறது. டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் டாப்-3 இடங்களை பிடித்துள்ள லபுஸ்சேன், ஸ்டீவன் சுமித், டிராவிஸ் ஹெட் சூப்பர் பார்மில் உள்ளனர். பந்து வீச்சில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஸ்காட் போலன்ட், நாதன் லயன் மிரட்ட காத்திருக்கிறார்கள். மொத்தத்தில் இவ்விரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரிசம பலத்துடன் மோதுவதால் யாருடைய கை ஓங்குவது என்பதை கணிப்பது கடினம். பர்மிங்காம் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலிய அணி இதுவரை 15 டெஸ்டில் விளையாடி அதில் 4-ல் வெற்றியும், 6-ல் தோல்வியும், 5-ல் டிராவும் சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது. மாலை 3.30 மணிக்கு… போட்டிக்கான இரு அணி வீரர்கள் வருமாறு:- இங்கிலாந்து: பென் டக்கெட், ஜாக் கிராவ்லி, ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), மொயீன் அலி, ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஆலி ராபின்சன். ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் சுமித், மார்னஸ் லபுஸ்சேன், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஸ்காட் போலன்ட் அல்லது ஹேசில்வுட். இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென்5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.