சென்னையில் மாபெரும் இன்னிசைக் கச்சேரி; கலைவாணர் அரங்கத்தில் இன்று நடக்கிறது

பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாபெரும் இன்னிசைக் கச்சேரி நடக்கிறது.

சென்னை, சினிமா பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள மந்தைவெளி மேற்கு வட்டச்சாலைக்கு, ‘டி.எம்.சவுந்தரராஜன் சாலை’ என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டவுள்ளார். இதையொட்டி, புதிய பெயர் சூட்டப்படவுள்ள சாலையின் பெயர்ப்பலகையை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வழியாக அவர் திறந்து வைக்கிறார். அதனைத்தொடர்ந்து, டி.எம்.சவுந்தரராஜன் பாடிய புகழ்பெற்ற பாடல்களை நினைவுகூரும் வகையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை 5 மணியளவில் இன்னிசைக் கச்சேரி நடைபெறவுள்ளது. இதில் அமைச்சர்கள், மேயர், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை அனைவரும் கண்டுகளிக்கலாம். அனுமதி இலவசம். டி.எம்.சவுந்தரராஜன் தமிழ் திரைப்பட பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் 1923-ம் ஆண்டு மதுரையில் பிறந்தார். தனது இளம் வயதிலேயே இசைப் பயிற்சி பெற்று இசை ஞானத்தை வளர்த்தார். தமிழ்த்திரையுலகில் 1950-ம் ஆண்டு வெளியான ‘கிருஷ்ண விஜயம்’ படத்தில் ‘ராதை நீ என்னை விட்டுப் போகாதேடி…’ என்ற பாடல்தான் அவர் குரலில் ஒலித்த முதல் பாடல் ஆகும். அன்று முதல் அரை நூற்றாண்டு காலம் தமிழ்த்திரையுலகில் சிறப்புமிக்க பாடகராகத் திகழ்ந்தார். இதனைத்தொடர்ந்து, திரையுலகில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி தமிழக மக்கள் அனைவரின் உள்ளங்களில் இடம் பிடித்தார். அவருடைய குரல் வளம், இசை ஞானம் மூலம் தனித்துவமான பாடல்களை பாடி திரையிசை வரலாற்றில் முத்திரைப் பதித்தவர் டி.எம்.சவுந்தரராஜன். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் ஆகியோருக்கு பல எண்ணற்ற பாடல்களை பாடி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். கருணாநிதி தந்த பட்டம் 1970-ம் ஆண்டில் டி.எம்.சவுந்தரராஜனுக்கு ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டத்தை கருணாநிதி வழங்கினார். 1969-ம் ஆண்டு ‘இசைக்கடல்’ என்று கவிஞர் கண்ணதாசனால் போற்றப்பட்டார். 2003-ம் ஆண்டு டி.எம்.சவுந்தரராஜனுக்கு ‘பத்மஸ்ரீ’ பட்டம் வழங்கப்பட்டது. தனது குரல் வளத்தால் மக்களின் எண்ணங்களில் நீங்காமல் இருந்த டி.எம்.சவுந்தரராஜன் 2013-ம் ஆண்டு மே 25-ந்தேதி மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *