செப்.15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 -தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, தமிழக அரசின் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் (வரவு-செலவு கணக்கு) சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். கையடக்க கணினி காலை 10.01 மணிக்கு அவர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார். தற்போது, காகிதம் இல்லாத வகையில் சட்டசபை செயல்படுவதால், மேஜையின் மீது இருந்த கையடக்க கணினி (டேப்லெட்) திரையை பார்த்து பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். உறுப்பினர்களும் தங்கள் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த கையடக்க கணினி மூலம் பட்ஜெட் உரையை பார்த்தனர். எடப்பாடி பழனிசாமி பேச முயற்சி அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பேச முயற்சித்தார். ஆனால், அவர் பேசுவதற்கு மைக் வழங்கப்படவில்லை. இதனால், அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று, அவருக்கு மைக் இணைப்பு வழங்குமாறு கோஷமிட்டனர்.

இந்த நேரத்தில், சபாநாயகர் மு.அப்பாவு, பட்ஜெட் உரை வாசிக்கப்படும்போது, இடையே வேறு எதுவும் பேச முடியாது என்பதை சுட்டிக்காட்டினார். ஆனாலும், தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டே இருந்தார். அ.தி.மு.க. உறுப்பினர்களும் அவருக்கு மைக் இணைப்பு வழங்கக்கோரி தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். அ.தி.மு.க. வெளிநடப்பு இதற்கு மத்தியில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை வாசித்துக்கொண்டே இருந்தார். சரியாக காலை 10.04 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதே நேரத்தில், அ.தி.மு.க.வில் மற்றொரு அணியான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் அவையில் இருந்தனர். சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளியேறிய பிறகு, அங்கு அமைதி திரும்பியது. நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தங்குதடையில்லாமல் பட்ஜெட் உரையை வாசித்தார். மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) வசூலை தொடங்கிய பிறகு, மாநில அரசுகள் புதிய வரியை விதிக்க முடியாது. என்றாலும், செஸ் போன்ற ஓரிரு இனங்கள் மூலம் மாநில அரசுகள் வரி விதிக்க வழிவகை இருக்கிறது. ஆனாலும், தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
காலை 10.01 மணிக்கு தனது உரையை தொடங்கிய நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதியம் 12.03 மணிக்கு தனது உரையை நிறைவு செய்தார். அதாவது, 2 மணி நேரம் 2 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். பட்ஜெட் உரை மொத்தம் 102 பக்கங்களை கொண்டதாக இருந்தது. பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:- காலை உணவு திட்டம் விரிவாக்கம் * சமூக நீதியை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசின் மகத்தான கனவு திட்டமான முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். இந்த திட்டத்துக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. கோவை, மதுரையில் மெட்ரோ ரெயில் * கோவையின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இந்நகரில் மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டம் அவிநாசி சாலை, சத்தியமங்கலம் சாலைகளை உள்ளடக்கி ரூ.9 ஆயிரம்  கோடி மதிப்பீட்டில் செயப்படுத்தப்படும்.
மதுரை மாநகரில் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.8,500 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். மதுரை நகரின் மையப் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் திட்டம் திருமங்கலத்தையும், ஒத்தக்கடையையும் இணைக்கும். இந்த 2 நகரங்களில் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு, பன்னாட்டு நிதி நிறுவனத்தின் நிதியுதவி மூலம் மெட்ரோ ரெயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். 400 கோவில்களில் கும்பாபிஷேகம் * வரும் நிதியாண்டில், 400 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும். வரும் ஆண்டில் பழனி, திருத்தணி, சமயபுரம் ஆகிய கோவில்களில் பெருந்திட்டப் பணிகள் ரூ.485 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். * அரசு பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களின் நலனைப் பாதுகாப்பதில் இந்த அரசு கண்ணும் கருத்துமாக உள்ளது. பழைய அரசு அலுவலர் குடியிருப்புகள் படிப்படியாக புதிதாக கட்டப்படும். வரும் நிதியாண்டில் ரூ.100 கோடி மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்படும். உயர்ந்து வரும் கட்டுமான செலவுகளைக் கருத்தில் கொண்டு, அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணம் ரூ.40 லட்சத்தில் இருந்து ரூ.50 லட்சமாக வரும் நிதியாண்டில் இருந்து உயர்த்தப்படும்.
குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை * தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்கப்பட இருக்கிறது. மத்திய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் கியாஸ் சிலிண்டர் விலை, விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 என்பது, அவர்களது அன்றாட வாழ்க்கைக்கு பேருதவியாக இருக்கும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டான இந்த ஆண்டில், திராவிட இயக்க மாதம் என சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில், அண்ணா பிறந்த நாளான 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்துக்காக பட்ஜெட்டில் ரூ.7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *