சீல் வைக்கப்பட்டதை எதிர்த்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு: இன்று விசாரணைக்கு வருகிறது
அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று வழக்கமான நடைமுறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 11ம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்க தடைக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அன்று காலை பொதுக்குழு கூட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்வதை எதிர்த்தும் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்களை கட்சி அலுவலகத்துக்குள் விடாமல் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பும் பின்னர் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போர்க்களமானது.
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தொண்டர்கள் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அலுவலகத்தில் உள்ள பொருட்கள் உடைக்கப்பட்டது. போலீசார் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் தகராறு முடிவுக்கு வரவில்லை. இதையடுத்து, அந்த சாலை முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கட்சி அலுவலகத்திற்குள் இருதரப்பும் சென்று பிரச்னை செய்ததால் கட்சி அலுவலகத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். அதற்கான நோட்டீஸ் ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வழங்கப்பட்டது. இருதரப்பினரும் கோட்டாட்சியர் முன்பு ஜூலை 25ம் தேதி ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் முகமது ரியாஸ், நீதிபதி சதீஷ்குமார் முன் ஆஜராகி, மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார்.
இதைக் கேட்ட நீதிபதி, எம்.எல்.ஏ. தாக்கல் செய்த வழக்கு என்பதால் தலைமை நீதிபதி ஒப்புதல் பெற்று உரிய நடைமுறைகளை முடித்து வழக்கமான முறைப்படி விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவுக்கு எண் இடும் நடைமுறைகள் முடிந்த பின் உரிய நடைமுறைகளை பின்பற்றி வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனவும் நீதிபதி தெரிவித்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு 82 வழக்காகவும், ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு 83 வழக்காகவும் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.