8 தமிழக படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவு

8 தமிழக படகுகளை அரசுடைமையாக்கி இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம், ராமேசுவரம், மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த படகுகள் இலங்கையில் ஊர்காவல்துறை, காங்கேசன் துறை, மன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த ஆண்டில் பல்வேறு காலகட்டங்களில் பிடிபட்ட தமிழகத்தை சேர்ந்த 8 படகுகளை தங்கள் நாட்டு அரசுடைமையாக்கி ஊர்க்காவல்துறை கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. இந்த 8 படகுகளில் ராமேசுவரத்தை சேர்ந்த 4 விசைப்படகுகளும், மண்டபத்தை சேர்ந்த ஒரு படகும், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 2 படகுகளும், நாகப்பட்டினத்தை சேர்ந்த ஒரு படகும் அடங்கும். அதே நேரத்தில் ராமேசுவரத்தை சேர்ந்த 3 விசைப்படகுகள், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த ஒரு விசைப்படகு என 4 படகுகளை விடுவித்தும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. விடுவிக்கப்பட்ட 4 படகுகளையும் இத்தனை நாட்கள் பராமரித்து பாதுகாப்பாக நிறுத்தி வந்ததற்கான தொகையை வருகிற மார்ச் 14-ந் தேதிக்குள் படகின் உரிமையாளர்கள் அபராதமாக கோர்ட்டில் செலுத்தினால் மட்டுமே இந்த 4 படகுகளும் விடுவிக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *