அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை பொது நோக்கத்திற்காக அரசு துறைகளுக்கு வழங்கலாம்: அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவு
அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்களை, பிற அரசு துறைகள் பொது நோக்கத்திற்காக உரிமை மாற்றம் செய்யலாம் என அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறநிறுவனங்களுக்கு சொந்தமான சொத்துக்களை அரசு மற்றும் ஆணையரின் உத்தரவு பெற்று நீண்ட கால குத்தகைக்கு விடவும், விற்பனை செய்யவும் அல்லது பரிமாற்றம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பொது நோக்கத்திற்காக அறநிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களை உரிமை மாற்றம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
தற்போது பொது நோக்கங்களுக்காக அறநிறுவங்களுக்கு சொந்தமான சொத்துக்களை உரிமை மாற்றம் செய்வது குறித்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்தவகையில் விற்பனை, நீண்ட கால குத்தகை, பரிமாற்றம் மூலம் உரிமை மாற்றம் செய்வது குறித்து பிற துறைகளிலிருந்து வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து ஆணையருக்கு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது. இந்து சமய கோட்பாடுகளுக்கு எதிரான நோக்கத்திற்காக நிலங்கள் கோரப்பட்டால் ஆரம்ப நிலையிலே நிராகரிக்கப்பட வேண்டும். உரிமை மாற்றம் செய்யப்பட உள்ள நிலத்தினை இணை ஆணையர் நேரில் பார்வையிட்டு, நிலத்தின் தற்போதைய நிலை, அதிலிருந்து பெறப்படும் வருவாய் முதலிய விவரங்களுடன் ஆய்வுக்குறிப்பினை முன்மொழிவுடன் இணைத்து அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.