காந்தாரா’ திரைப்படம் இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை

சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு ‘காந்தாரா’ திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. .

பெங்களூரு கடந்த வருடம் வந்த படங்களில் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரிய ஆச்சரியத்தில் மூழ்கடித்த கன்னட படம் காந்தாரா. இது கன்னடத்தில் வெற்றி பெற்றதால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலுமே வசூலை அள்ளியது. ரூ.8 கோடி செலவில் தயாரான காந்தாரா ரூ.400 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். கர்நாடகத்தில் வாழும் பழங்குடி மக்களின் சமய வழிபாட்டை மையமாக வைத்து வந்தது. படத்தில் இடம்பெற்ற மாடு விரட்டும் காட்சியும், தெய்வகோலா என்கிற சாமியாட்ட காட்சியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் படத்தை பாராட்டினர். காந்தாரா திரைப்படத்தை 2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பி வைக்க படக்குழு திட்டமிட்டது . அதன்படி விருது பரிந்துரைக்கு இப்படம் அனுப்பி வைக்கப்பட்டதாக படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனர் விஜய் கிர்கந்தூர் தெரிவித்திருந்தார். மேலும் கடைசி நேரத்தில் விண்ணப்பத்தை அனுப்பியிருந்தாலும், தங்களது படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகும் என்ற நம்பிக்கையில் படக்குழு இருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் ‘காந்தாரா’ திரைப்படம் ஆஸ்கார் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது . இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை படத்தை தயாரித்த ஹோம்பேல் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் “கந்தாரா’ 2 ஆஸ்கார் தகுதிகளைப் பெற்றுள்ளதை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்! எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *