கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம்

புத்தாண்டு தரிசனம்

2023-ம் ஆண்டு நேற்று பிறந்தது. இதையொட்டி பல்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் களை கட்டியது. நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

மக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 3 மணிக்கே முக்கியமான கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை பார்க்க முடிந்தது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு கட்டைகளால் தரிசனபாதை அமைக்கப்பட்டிருந்தது. அதில் பந்தல் போடப்பட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெண்கள், குழந்தைகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பார்த்தசாரதி கோவில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்து புத்தாண்டு வழிபாட்டை மேற்கொண்டனர். சென்னை பிராட்வேயில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

கந்தக்கோட்டம் முருகன் கோவில், வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வடபழனி முருகன் கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம், தங்க நாணய கவச பூஜை நடந்தது. பக்தர்களின் வசதிக்காக மதியம் நடை சாத்தப்படவில்லை. இரவு 9.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தியாகராயநகர் திருப்பதி தேவஸ்தானம்…

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சென்னை தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. புத்தாண்டையொட்டி கோவிலில் மலர்கள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வணங்கி சென்றனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இறை அன்பர்கள் சாக்லெட் கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

திருவொற்றியூர்வடிவுடையம்மன்

திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ சாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று இரவு 9 மணி வரை கோவில் நடை திறந்து இருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக கோவில் உள் பிரகாரத்தில் பந்தல் போட்டு, தடுப்பு கட்டைகள் அமைத்து வரிசையில் சென்று சாமி கும்பிட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், மதிய உணவு மற்றும் சுகாதார வசதிகளை கோவில் நிர்வாக உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

திருவேற்காடுதேவி கருமாரியம்மன்

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் நள்ளிரவு 12 மணி அளவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதேபோல் கோவிலில் பிறசன்னதிகளில் உள்ள விநாயகர், குருபகவான், துர்கை, பிரித்தியங்கரா, முருகன், பைரவர் உள்ளிட்ட மற்ற தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர்.

குன்றத்தூர்-மாங்காடு

குன்றத்தூர் முருகன் கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் நடை திறக்கப்பட்டது. முன்னதாக மூலவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், விபூதி கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பட்டுவஸ்திரங்கள் அணிவிக்கப்பட்டு, மலர்மாலைகள் சூடி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

இதேபோல் மாங்காடு காமாட்சியம்மன் கோவிலில் நேற்று அதிகாலை கோ பூஜை மற்றும் தனூர் மாத அபிஷேகம் நடந்தது. பின்னர் 5 மணியளவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *