‘இளம் தலைமுறையினருக்கு கலாசாரம், பண்பாட்டை கற்றுக் கொடுங்கள்’ – அமைச்சர் ரகுபதி வேண்டுகோள்

நகரத்தார் மலர் சார்பில் நகரத்தார் மகளிர் மாநாடு, சென்னை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா ஹாலில் நேற்று தொடங்கியது. மாநாட்டுக்கு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை தாங்கினார். மாநாட்டில் செட்டிநாடு குழும தலைவர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, அவரது மனைவி கீதா முத்தையா, பிரபல ஜோதிடர் சிவல்புரி சிங்காரம், முன்னாள் போலீஸ் டி.எஸ்.பி. எஸ்.முத்துகுமார், டாக்டர் எல்.மீனாட்சி சுந்தரம், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:-

ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். அப்போது ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு ஆண்தான் இருந்தாக வேண்டும். இதுதான் உண்மை. ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம். அனைவரும் ஒன்று. எந்த ஏற்றத்தாழ்வுகளும் கிடையாது. அதைத்தான் நாங்கள் திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம். இந்த முக்கியத்துவத்தை பெண்களுக்கு தரும் சமுதாயமே நகரத்தார் சமுதாயம்.பொருள் ஈட்டிச் செல்ல கணவன் வெளியே செல்கையில் குடும்பத்தை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொள்வது பெண்கள்தான். குடும்பத்தில் எந்த விஷயமாக இருந்தாலும் பெண்கள் முடிவு எடுத்தால்தான் அது சரியாக இருக்கும். அதனால் பெண்கள் முடிவுக்கே நாம் அனைத்தையும் விட்டு விடுகிறோம்.

நமது ஆச்சிமார்கள் திறமையும், கெட்டிக்காரத்தனமும் மிக்கவர்கள். எப்படியாவது பொருளை சேர்த்து, அதேவேளை சேமித்து வைப்பதிலும் புத்திசாலிகள். ஒரு பெண் குழந்தை பிறந்தால், அதன் திருமணத்துக்கு தேவையான பொருட்களை அப்போதே சேமிக்க தொடங்கி விடுவார்கள். வீட்டு செலவுக்கு பணம் இல்லாத சூழலில், கைப்பணத்தை எடுத்து செலவு செய்வார்கள்.

அப்படி நமது ஆச்சிமார்கள் சிறப்பு பெற்றவர்கள். நகரத்தார் சமுதாயம் இடையில் கொஞ்சம் பொருளாதாரத்தில் சரிந்தனர். ஆனால் இளைஞர்கள் ஐ.டி. துறையில் கோலோச்சியதின் விளைவாக இன்றைக்கு இந்த சமுதாயம் மீண்டும் வளர தொடங்கியிருக்கிறது. எனவே இளைஞர்களுக்கு நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் சொல்லித்தாருங்கள். அதுவே இப்போதைய தேவை. இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் இலவச மருத்துவ முகாம், திருமண கலந்துரையாடல் நிகழ்ச்சி மற்றும் சமையல் போட்டியும் நடந்தது. நகரத்தார் மகளிர் மாநாடு இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) நிறைவு பெறுகிறது. நிறைவு நாளில் இன்னிசை, சமுதாய சிந்தனை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *