தமிழக மருத்துவத்துறையில் குரல் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

டாக்டர் எம்.குமரேசன், கே.நவீன்பாரத் ஆகியோர் எழுதிய மகரக்கட்டு மருத்துவம், கீச்சுக்குரலுக்கு புதிய எளிய சிகிச்சை என்ற புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்தியன் அலுவலர்கள் சங்க வளாகத்தில் நேற்று நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ அறிவியல் கழகத்தலைவர் டாக்டர் கமலி ஸ்ரீபால் தலைமை தாங்கினார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புத்தகத்தை வெளியிட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் ஐ.லியோனி பெற்றுக் கொண்டார்.

இதில் ஓய்வுபெற்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் மாநில கண்காணிப்பு குழுவின் தலைவர் பி.ஜோதிமணி, டாக்டர்கள் சொக்கலிங்கம், கே.காந்தராஜ், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னைவாழ் நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.தங்கமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

டாக்டர் எம்.குமரேசன் ஆதாரப்பூர்வமாக மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அவர் 1,010 பேருக்கு குரல் சிகிச்சை மேற்கொண்டு, அவர்களின் மனநிலையை மாற்றம் செய்து இருக்கிறார். இந்தியா முழுவதும் மட்டுமல்லாது, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இவரிடம் சிகிச்சை பெற்று நலம் பெற்று இருக்கிறார்கள்.

இந்த சிகிச்சை முறையை வேறு யாருக்கும் கற்றுக்கொடுத்து இருக்கிறீர்களா? என்று டாக்டரிடம் கேட்டேன். அவர் 2 பேருக்கு சொல்லி தந்து இருப்பதாக கூறினார். அவருடைய ஆற்றலை இன்னமும் பல நூறு பேருக்கு பயிற்றுவித்து இருக்க வேண்டும். விரைவில் முதல்-அமைச்சரிடம் இதுபற்றி தெரிவித்து, அவரை பயன்படுத்தி் கொள்வேன். டாக்டர் குமரேசன் மூலம் பலர் பயிற்சி பெற வேண்டும். கீச்சுக்குரலில் இருந்து கம்பீர குரலுக்கு மாற எவ்வளவோ பேர் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் குரல் மாற்றத்தை ஏற்படுத்துகிற இந்த அரிய சிகிச்சை குறித்து இவர் மூலம் தமிழகத்தின் மருத்துவ துறையில் சிறப்பு பிரிவை ஏற்படுத்தி ஏராளமான டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *