தேங்கிய தண்ணீரால் பொதுமக்கள் பாதிப்பு: மழைநீரை கல்குவாரியில் சேமிக்கும் பணி தீவிரம்
மங்காடு நகராட்சி மற்றும் கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் இடுப்பளவு தேங்கி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள.
இதற்கு முக்கிய காரணம் மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதி தண்ணீர் மட்டும் அல்லாது பூந்தமல்லி நகராட்சி, மலையம்பாக்கம், மேப்பூர், நசரத்பேட்டை, அகரமேல், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகளில் இருந்து அதிக அளவில் மழைநீர் வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையை கடந்து மாங்காடு நகராட்சிக்கு வருவதால் இங்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் தந்தி கால்வாய் மற்றும் மணப்பாக்கம் கால்வாயில் இருந்து வரும் மழைநீரால் மாங்காடு, கொளப்பாக்கமும் பாதிக்கப்படும் என்பதால் தற்காலிகமாக அந்த கால்வாய்களை மணல் முட்டைகள் கொண்டு அடைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த தண்ணீர் அனைத்தும் சிக்கராயபுரம் கல்குவாரிக்கு திருப்பும் பணி தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகள் முடிவடைந்தால் இனி வரும் மழை காலங்களில் 2 பகுதிகளும் பாதிக்கப்படாது என்றும் இந்த பணி கை கொடுக்குமானால் நிரந்தரமாக இந்த பகுதிகளில் கால்வாய்கள் அமைத்து வீணாக செல்லும் மழை நீரை கல்குவாரியில் தேக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.