கட்டாயப்படுத்தி படிக்க சொல்வதால்தான் இந்தியை எதிர்க்கிறோம் – சென்னை பல்கலைக்கழக நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேச்சு

சென்னை பல்கலைக்கழக சமூகவியல் துறையின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை, பல்கலைக்கழக சமூகவியல் துறை மற்றும் அந்த துறையின் முன்னாள் மாணவர்கள் சங்கம் இணைந்து பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடத்தியது. இந்த நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி தலைமை தாங்கினார். சமூகவியல் துறை தலைவர் எம்.தமிழரசன் வரவேற்று பேசினார். சமூகவியல்துறை முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சவுமியா அன்புமணி, பொதுச்செயலாளர் கோபுடோ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 

இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பொன்விழா நினைவு மலரை அமைச்சர் பொன்முடி வெளியிட, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கவுரி பெற்றுக்கொண்டார். இதில் சமூகவியல்துறையின் முன்னாள் தலைவர்கள் டி.சுந்தரம், டி.ஜெயலட்சுமி, முன்னாள் பேராசிரியர் இந்திரா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-

சமூகவியல் துறை சாதாரணமானதல்ல. அனைத்து கலை பாடங்களுக்கும் சமூகவியல் பாடம்தான் தாயாக இருக்கிறது. பாரம்பரியமிக்க பாடமாகவும் உள்ளது. உலகத்திலேயே மகளிர் கல்விக்காக சிறந்த சாதனையை செய்துகொண்டிருப்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஆண்-பெண், அனைத்து சமூகத்தினரும் சமம், மனிதாபிமானம், சமூகநீதி வளர வேண்டும் என்பதுதான் சமூகவியல். அதைத்தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி செய்கிறது. கல்விக்கு இன்று பிரச்சினை வந்திருக்கிறது. இந்தி எப்படி திணிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். விருப்பப்பட்டு இந்தி படிப்பது வேறு, அதையே கட்டாயப்படுத்தி படிக்கவேண்டும் என்று சொல்வது வேறு.

ஆகவேதான் இந்தியை எதிர்க்கிறோம். நமக்கு முன்பாகவே மேற்கு வங்காளத்தில் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள். மற்ற மாநிலங்களிலும் தாய்மொழி பற்று வளர்ந்திருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், ‘பசுமை பரப்பை உயர்த்துவது சமூகத்தில் அவசியமாக உள்ளது. பசுமை பரப்பு 33.3 சதவீதம் இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரையில், 20.27 சதவீதமாக இருக்கிறது. அதை 25 சதவீதமாக உயர்த்துவோம் என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. வெறும் 4.73 சதவீதம் அதிகரிப்பு பெரிய அறிவிப்பா? என கருதலாம். ஆனால் அவ்வாறு செய்ய 7½ லட்சம் ஹெக்டேர் பரப்பில் மரங்களை நட்டால்தான் முடியும். அதை முதல்-அமைச்சர் நடைமுறைப்படுத்தி வருகிறார்’ என்றார்.

சமூகவியல் துறை முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சவுமியா அன்புமணி பேசும்போது, ‘சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்விதான் உண்மையான சொத்து என்று பேசினார். அதற்கு அடித்தளமாக சமூகவியல் பாடத்தை பள்ளிக்கூடங்களில் கணிதம், அறிவியல் பாடத்துடன் சேர்த்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்று இந்த நிகழ்ச்சி வாயிலாக இந்த கோரிக்கையை வைக்கிறோம். சமூகவியல்துறை சமூகநீதி, ஆண்-பெண் சமத்துவம், அரசியல் பங்களிப்பு, சுற்றுச்சூழல், நீடித்த வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகிறது’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *