ஓடுபாதையின் நீளம் 400 மீட்டா் அதிகரிப்பு – பெரிய ரக விமானங்கள் தரை இறங்க முடியும்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்கள் 1,350 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. விமானம் மற்றும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே உள்நாடு, பன்னாட்டு விமான முனையங்களை இணைத்து நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த விமான முனையமாக மாற்ற ரூ.2,400 கோடியில் விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.

சென்னை விமான நிலைய மேம்பாட்டுக்காக கடந்த ஜூலை மாதம் பல்லாவரம் மற்றும் பரங்கிமலை பகுதியில் 21.24 ஏக்கர் நிலத்தை விமான நிலைய ஆணையத்திடம் தமிழக அரசு வழங்கியது. அதில் 10.20 ஏக்கா் நிலத்தை பயன்படுத்தி சென்னை விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்தி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தற்போது 2 ஓடுபாதைகள் உள்ளன. அதில் முதல் ஓடுபாதை 3,658 மீட்டா் நீளமும், 45 மீட்டா் அகலமும் கொண்டது. 2-வது ஓடுபாதை 2,890 மீட்டா் நீளமும், 45 மீட்டா் அகலமும் கொண்டது.

இதில் முதல் ஓடுபாதையின் நீளத்தை மேலும் 400 மீட்டா் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் முதல் ஓடுபாதை 4,058 மீட்டா் கொண்டதாக மாறும். மேலும் பரங்கிமலை பகுதியில் விமானங்கள் ஓடுபாதையில் தரை இறங்கும்போது விமானிகளுக்கு உதவும் வகையில் கூடுதல் ஒளி அமைப்பு வசதிகள், நவீன கருவிகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் விமானங்கள் தரை இறங்குவதில் சிரமங்கள் இருக்காது.

பெரிய ரக விமானமான ஏா்பஸ் ஏ-380 விமானங்கள் இதுவரை சென்னை விமான நிலையத்தில் வந்து தரை இறங்கவில்லை. அந்த விமானம் 3 அடுக்குகளுடன் 746 இருக்கைகள் உடையது. இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய விமான நிலையங்களில்தான் இந்த வகை விமானங்கள் வந்து தரை இறங்கும் வசதி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதைகளின் நீளம் குறைவாக இருப்பதால் பெரிய ரக விமானங்கள் வந்து தரை இறங்குவதில் சிரமங்கள் இருந்தன. தற்போது சென்னை விமான நிலையத்தில் ஓடுபாதையின் நீளம் அதிகரிக்கப்படுவதால் இனிமேல் பெரிய ரக விமானங்கள் வந்து தரை இறங்கி, மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *