திருமணத்தன்று மூளைச்சாவு அடைந்த வாலிபர் – உடல் உறுப்புகள் தானம்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு, அண்ணா நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன் ராஜ் (வயது 32). இவர் திருப்போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் மின் பராமரிப்பு பணி ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவருக்கும் கடலூர் அடுத்த சிதம்பரத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் கடந்த 12-ந்தேதி காலை திருப்போரூர் அருகே ஒரு தனியார் மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதைத்தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலமாக இருதரப்பு வீட்டினரும் உறவினர்களுக்கு பத்திரிகை அளித்து வந்த நிலையில், கடந்த 9-ந்தேதி தன்னுடன் கல்லூரியில் வேலை பார்ப்பவர்களுக்கு திருமண பத்திரிகை வழங்க மோட்டார் சைக்கிளில் ராஜ் சென்று கொண்டிருந்தார்.

திருமண பத்திரிகை கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது, கேளம்பாக்கத்தில் இருந்து திருப்போரூர் நோக்கி சென்ற யோவான் என்பவரின் மோட்டார் சைக்கிள் வேகமாக மோதியது. இதில் நிலைத்தடுமாறிய ராஜின் மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கேளம்பாக்கம் தனியார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது பெற்றோர், உறவினர்கள் மூளைச்சாவு அடைந்த ராஜின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக தெரிவித்தனர். திருமணம் நடைபெற வேண்டிய நாளில் வாலிபர் மூளைச்சாவு அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *