‘யூ-டியூப்’ சேனல்கள் மீது புகார்கள் வந்தால் நடவடிக்கை – போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில், போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்புக்கான (டிராபிக் வார்டன் ஆர்கனிசேஷன்) அலுவலகத்தை, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று திறந்து வைத்தார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

போக்குவரத்து பாதுகாவலர்கள் அமைப்பு ஏற்கனவே செயல்பட்டு வரும் அமைப்பாகும். 142 பேர் இந்த அமைப்பில் இருக்கிறார்கள். புதிதாக பெண்கள் உள்பட 24 பேர் நியமிக்கப்படவும் இருக்கிறார்கள். இந்த அமைப்பின் மூலம் இதுவரை 415 நிகழ்ச்சிகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்காக நடத்தப்பட்டிருக்கின்றன. 470 பள்ளிகளில் 18 ஆயிரத்து 500 மாணவர்களுக்கு நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறோம்.

அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, சாலை பாதுகாப்பு குறித்து தன்னார்வலர்கள் மூலமாக அந்தந்த பள்ளிகள் முன்பு விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறோம்.

சென்னையில் அதிக விபத்துகள் நடப்பதை தடுக்கும் நோக்கில், நகரில் அபாயகரமான பகுதி என்ற வகையில் 104 இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் என்ஜினீயர்கள், மாநகராட்சிகள், ஐ.ஐ.டி. பிரிவினர் உள்ளடங்கிய குழுவினர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்கள்.

குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டுவோர் ஹெல்மெட் அணியவேண்டும். போக்குவரத்து போலீசார் மேற்கொண்ட பல்வேறு தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் கடந்த ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டில் 20 சதவீத விபத்து-மரணங்கள் குறைவு தான். 2022-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையும்.

போக்சோ, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், பொது இடங்களில் அத்துமீறல் இதுதொடர்பான புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்க போலீசாரை நாங்கள் அறிவுறுத்தியிருக்கிறோம். தற்போது வரை சென்னையில் ‘யூ-டியூப்’ சேனல் நிறுவனத்தினர் மீது புகார்கள் வரவில்லை. புகார்கள் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்கள் மோதல் சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கொலை போன்ற சமூகவிரோத செயல்களை தடுக்கும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேவைப்படுவோரை குண்டர் சட்டத்திலும் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

நமது சட்டம்-ஒழுங்கு போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கொலை சம்பவங்கள் கடந்த ஆண்டை விட 20 சதவீதம் குறைந்திருக்கின்றன. குட்கா, மாவா போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவிகளை வைத்திருப்போர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். பள்ளி மாணவர்களை அளவுக்கு அதிகமாக ஏற்றிச்செல்லும் ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகன உரிமையாளர்களை கண்டறிந்து எச்சரித்து வருகிறோம்.

2004-ம் ஆண்டு முதல் தீர்க்கப்படாத கொலை வழக்குகள் 8 என்ற எண்ணிக்கையில் உள்ளன. அந்த வழக்குகளை தீர்த்து வைக்க சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *