வாகனங்களை நிறுத்த பிரிமீயம் கட்டணம் உயர்வு – மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம்

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டத்தில் நேற்று நடந்தது. பட்ஜெட் கூட்டத்துக்கு பின்னர் நடைபெறும் 2-வது மன்ற கூட்டம் இதுவாகும். மன்ற கூட்டத்துக்கு, மேயர் பிரியா தலைமை தாங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், பொறுப்பு கமிஷனர் எம்.எஸ்.பிரசாந்த், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக நேற்றை கூட்டத்தில் நேரமில்லா நேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டம் 11.30 மணிக்கு நிறைவடைந்தது. மன்ற கூட்டத்தில் மொத்தம் 100 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதில் முக்கியமான தீர்மானங்கள் வருமாறு:-

* ‘டிரோன்’ மூலம் கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிக்கு வட்டார அலுவலகங்களுக்கு (வடக்கு, மத்தியம் மற்றும் தெற்கு) ‘டிரோன்’ இயக்குனர் பயிற்சி பெற்ற உரிமம் உள்ள 7 திருநங்கை பைலட்டுகளை பணி அமர்த்துவதற்கான செலவீன தொகைக்கு நிர்வாக அனுமதி

* சிறு வயதில் இருந்தே ஆண்-பெண் சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பாலின குழுக்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

* 32 பள்ளிகளில் மாண்டிசோரி உபகரணங்கள் வழங்கவும், பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி.

* சென்னை மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் 29,132 மாணவ-மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் விலையில்லா திட்டத்தின் கீழ் 2 செட் சீருடைகள் கொள்முதல் செய்ய அனுமதி.

* தூய்மை இந்தியா சேமிப்பு நிதியின் கீழ், மழைக்காலங்களில் வெள்ள நீரை வெளியேற்ற ஏதுவாக நீர்வழி தடங்களை சுத்தப்படுத்தும் பணிக்காக ரூ.13 கோடியில் 2 ‘ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கலேட்டர்’ உபகரணங்களும், 5 ஆண்டு காலத்துக்கு இயக்குதல் மற்றும் ஒருங்கிணைந்த பராமரிப்பு ரூ.9.90 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.22.90 கோடியில் கொள்முதல் செய்ய மின்னணு ஒப்பம் கோரப்படும்.

* பெரம்பூர்-மாதவரம் நெடுஞ்சாலையில் புதிதாக சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை நடுநிலைப்பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

* செனாய் நகர் (அம்மா அரங்கம்) கலையரங்கத்தின் வருவாயை பெருக்க ஒரு நாள் வாடகை கட்டணம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 360 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* தியாகராய சாலை ஒருவழிப்பாதையில் வாகன நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்த பிரீமியம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 1 மணி நேரத்துக்கு 4 சக்கர வாகனங்களை நிறுத்தகட்டணம் ரூ.60-ஆகவும், 2 சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கான கட்டணம் ரூ.15-ஆகவும் உயர்த்தப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.

* கொருக்குப்பேட்டை போஜராஜநகர் ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி ஆணைக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *