பொறியியல் துறைகளை தேர்வு செய்வது போன்று கிரிக்கெட்டையும் தேர்வு செய்யலாம் – முன்னாள் வீரர் தகவல்
கோவில்பட்டி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முத்தானந்தபுரம் தெருவில் உள்ள மாடர்ன் ஹார்டுவேர்ஸ் நிறுவனத்திற்கு டி.என்.பி.எல் விளம்பரதாரர் ஷரோன் பிளைவுட்ஸை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் எல்.சிவராமகிருஷ்ணன் மற்றும் கிரிக்கெட் வர்ணையாளர் முத்து இருவரும் பங்கேற்றனர். மேலும் அருகில் இருந்த முத்தானந்தபுரம் மடத்தினையும் பார்வையிட்டனர்.
அப்போது இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் எல்.சிவராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
டி.என்.பி.எல் நடத்துவதற்கு முக்கிய காரணம் மாவட்ட அளவில் கிரிக்கெட் வளர்ச்சிக்கு தான், இதனால் நிறைய வீரர்களின் உற்சாகம் அதிகரித்துள்ளது. மேலும் வேலை வாய்ப்பு கிடைக்கிறது. டி.என்.பி.எல்லில் சிறப்பாக விளையாடினால் ஐபிஎல் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது.
கடந்த ஆண்டு டி.என்.பி.எல் போட்டியில் பங்கேற்ற 14 வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளனர். ஐபிஎல் போட்டி மட்டுமல்ல, இந்திய அணியிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கும், மாவட்டங்களில் கிரிக்கெட் வளர இது உதவும், இளைஞர்கள் மருத்துவம், பொறியியல் துறைகளை தேர்வு செய்வது போன்று கிரிக்கெட்டையும் தேர்வு செய்யலாம், அதற்கேற்ற வருமானம் உள்ளது.
போட்டிகளை நடத்த ஸ்பான்சர்ஸ் முக்கியம், இன்றைக்கு கிரிக்கெட் வேற மாதிரி மாறி உள்ளது. சிக்ஸர், போர் அடிப்பது அதிகரித்துள்ளது. முன்பு ஒரு வீரர் போர் அடித்தால் பந்து வீச்சாளர்கள் கை தட்டுவது வழக்கம். ஆனால் தற்பொழுது முறைப்பார்கள், வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
அப்படி இருந்தால் தான் ரசிகர்கள் அதிகளவில் கிரிக்கெட் பார்க்க வருவார்கள், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்பொழுது ரசிகர்கள் அதிகளவில் பார்வையிட வருவது மிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக கூறினார்.