புதிதாக விமான நிலையம்: நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்க வேண்டும்

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூரில் புதியதாக விமானநிலையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதனால் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் 4 ஆயிரத்து 800 ஏக்கர் நிலங்கள் கையகபடுத்தப்படவுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விமான நிலையம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

கூட்டத்தில் காஞ்சீபுரம் வட்டத்தில் வளத்தூர், பரந்தூர், நெல்வாய், தண்டலம், பொடவூர், மடப்புரம், தொடூர் என 7 வருவாய் கிராமங்களும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் எடையார்பாக்கம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், ஏகனாபுரம், அக்கமாபுரம், சிங்கிலிபாடி உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுமக்கள் தங்களின் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத்தொகை வழங்கி தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்காமல் அரசு பார்த்து கொள்ளவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

நிகழ்ச்சியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், கு.செல்வப்பெருந்தகை, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *