அமுதப்பெருவிழா பூங்கா பெயர் பலகை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு நிதியில் இருந்து ரூ.18.71 கோடி செலவில் சென்னை கஸ்தூரிபாய் பறக்கும் ரெயில் நிலையம் முதல் திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையம் வரை பக்கிங்காம் கால்வாய் கரையில் அடர்வன காடுகள், நடைபாதை, சைக்கிள் ஓடுதளம் மற்றும் சுற்றுப்புறத்தை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இந்த பூங்காவின் மொத்த நீளம் 2.1 கி.மீ. ஆகும். இந்த பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 12-ந் தேதி திறந்து வைத்தார்.

கஸ்தூரிபாய் பறக்கும் ரெயில் நிலையம் முதல் திருவான்மியூர் பறக்கும் ரெயில் நிலையம் வரை பக்கிங்காம் கால்வாய் கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவுக்கு 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில், “சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா பூங்கா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த பூங்காவின் பெயர் பலகையை மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்து, மரக்கன்றை நட்டார். தொடர்ந்து சிறுவர்களின் சிலம்பாட்ட பயிற்சிகளையும், திறந்தவெளி உடற்பயிற்சி பகுதியையும், கலை நிகழ்ச்சிகள் நடக்கும் பகுதியையும், ‘ஸ்கேட்டிங்’ பயிற்சி பகுதியையும் அவர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., ஹசன் மவுலானா எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *