கம்பன் கழகத்தின் 48-வது ஆண்டு விழா – கவர்னர் இல.கணேசன் விருதுகளை வழங்குகிறார்

சென்னை கம்பன் கழகம் சார்பில் 48-வது ஆண்டு ‘கம்பன் விழா’ மயிலாப்பூர் ஏ.வி.எம். கல்யாண மண்டபத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தொடங்கி வருகிற 14-ந்தேதி வரை நடக்கிறது. கம்பன் காப்பியம் கூறும் தமிழ் விழாவாக நடைபெற இந்த விழாவை மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களின் கவர்னர் இல.கணேசன் தலைமையேற்று தொடங்கி வைத்து பேசுகிறார். தொடர்ந்து ஆழ்வார்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பர் விருதினை டாக்டர் சுதா சேஷய்யனுக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நிறுவியுள்ள பேராசிரியர் கே.சுவாமிநாதன் நினைவு பரிசை எம்.எஸ்.பெருமாளுக்கும், நீதிபதி மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசினை டாக்டர் முகமது ரேலாவுக்கும் கவர்னர் இல.கணேசன் வழங்குகிறார்.

தொடர்ந்து கலை, இலக்கியத் துறைகளில் புகழுடன் விளங்கும் 16 பேருக்கும், தமிழ் இலக்கிய அறிவாற்றலை உயர்த்தும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி அளவிலான இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது.

எஸ்.ராஜா எழுதிய ‘கம்பனில் நகை மலர்கள்’ எனும் ஏவி.எம். அறக்கட்டளை சொற்பொழிவு நூலை கவர்னர் இல.கணேசன் வெளியிட ‘சிவாலயம்’ ஜெ.மோகன் பெற்றுக் கொள்கிறார். அதேபோல், இலங்கை முன்னாள் கல்லூரி பேராசிரியர் அ.செ.சுந்தரராஜன், தொகுத்த ‘கம்பராமாயண சொல்லகராதி’ கவர்னர் வெளியிட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ம.முரளி பெற்றுக் கொள்கிறார்.

சென்னை கம்பன் கழகமும், கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து நடத்திய ‘கம்பனில் ஆழம் கண்ட வேழம்’ மற்றும் ‘காப்பிய உரையாடல்கள்’ தொடர் சொற்பொழிவு ஒலிப்பேழைகளை கவர்னர் இல.கணேசன் வெளியிட முதல் இரு பேழைகளை மீனா வீரப்பன் பெற்றுக்கொள்கிறார்.

டாக்டர் சுதா சேஷய்யன் ‘தோள் கண்டார் தோளே கண்டார்’ என்னும் தலைப்பில் பேசுகிறார். சாரதா நம்பி ஆரூரன் அறிமுகவுரை வழங்குகிறார். 48-ம் ஆண்டு கம்பன் விழா ‘அடைக்கலம் ஓர் அறநெறி’ என்கின்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறுகிறது. முதல் நாள் தொடக்க விழாவில் சென்னை கம்பன் கழகத்தலைவர் இராம.வீரப்பன் வரவேற்கிறார். 2-ம் நாள் நிகழ்ச்சியில், காலையில் தனியுரை, தகவுரை, மூவர் முற்றம், கவியரங்கம் மற்றும் அன்று மாலை மாணவர் முற்றம், மாண்புரை, தமிழ்ச்சோலை முதலிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 14-ந்தேதி நடக்கும் 3-ம் நாள் நிகழ்ச்சியில் அன்று காலை இயலுரை, இன்னுரை, வழக்காடு மன்றம் மற்றும் அன்று மாலை எழிலுரை பட்டிமண்டபம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த விழாவில் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இதுதவிர, இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து தமிழ் அறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர் என்று கம்பன் கழகம் தலைவர் இராம.வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *