ரூ.350 கோடியில் புதிய நீர்தேக்கம்; சுற்றுச்சூழல் அனுமதி கோரியது நீர்வளத்துறை
சென்னையின் குடிநீர் தேவைக்காக திருப்போரூர் அருகே, 4,735 ஏக்கர் அரசு நிலத்தில், புதிய நீர்தேக்கம் அமைக்கும் பணிக்கு நீர் வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி கோரப்பட்டுள்ளது. மாமல்லபுரம் வரை குடிநீர் வினியோகம் செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரி வாயிலாக சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.
இந்த ஏரிகள் மொத்தம், 13.2 டி.எம்.சி., கொள்ளளவு உடையவை. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளால், சென்னையின் ஒரு மாத குடிநீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, கூடுதல் நீராதாரங்களை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
அதன்படி, திருப்போரூர் அருகே பகிங்ஹாம் கால்வாயை ஒட்டி, கோவளம் வடிநிலப்பகுதியில், 350 கோடி ரூபாயில் புதிய நீர்தேக்கம் அமைக்கப்படும், என, மார்ச் மாதம் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகளுக்கு மத்தியில், இந்த புதிய நீர்தேக்கம் அமைய உள்ளது.
இதற்காக, தமிழக உப்பு நிறுவனம் உட்பட அரசிற்கு சொந்தமான 4,735 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிலங்கள் கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், காலவாக்கம், நெம்மேலி ஆகிய கிராமங்களை ஒட்டி அமைந்துள்ளது. பயன்படுத்தப்படாத இந்த நிலங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலங்களில் மானாமதி, சிறுதாவூர், தையூர், மணவேடு, காலவாக்கம் உள்ளிட்ட 69 ஏரிகளில் இருந்து வெள்ள உபரிநீர் வருகிறது. ஆண்டுதோறும், 2.97 டி.எம்.சி.,க்கு மேல் நீர் அங்கு தேங்கி, வீணாகி பகிங்ஹாம் கால்வாய் வாயிலாக கடலில் கலக்கிறது.
இதில், 1.60 டி.எம்.சி., நீரை சேமிக்கும் வகையில், புதிய நீர்தேக்கம் அமையவுள்ளது.
மாமல்லபுரம்
இந்த நீரை சுத்திகரித்து, சோழிங்கநல்லுார், நாவலுார், மேடவாக்கம், பள்ளிக்கரை, சிறுசேரி, கேளம்பாக்கம் பகுதிகளில் வினியோகம் செய்யப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி மாமல்லபுரம் வரை உள்ள பகுதிகளுக்கும் குடிநீர் எடுத்து செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. நீர்தேக்கத்தை சுற்றி சுற்றுச்சூழல் பூங்காவும் அமைக்கப்பட உள்ளது.
இந்த புதிய நீர்தேக்கத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை வாயிலாக விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு ஒரு மாதத்தில் அனுமதி பெற்று, அடுத்தக்கட்ட பணிகளை துவங்க நீர்வளத்துறையினர் தயாராகி வருகின்றனர்.