சித்ரா பவுர்ணமி விழா விமரிசை பால்குடங்கள் எடுத்து பக்தர்கள் ஊர்வலம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று, கபாலீஸ்வருக்கு மரிக்கொழுந்து சார்த்தும் நிகழ்வு நடந்தது. மேலும், கோலவிழி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது.
வீடுகளில், கலந்த சாதம் தயாரித்து, சுவாமிக்கு படைத்து, அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி, பக்தர்கள் கொண்டாடினர்.
சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், நேற்று மாலை தங்கள் குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்களுடன் மெரினா, எலியாட்ஸ் கடற்கரையில் அமர்ந்து நிலாச்சோறு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
வில்லிவாக்கத்தில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த தேவி பாலியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, இங்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்டோர், பால் குடங்கள் எடுத்து, மாட வீதிகள் வழியாக சென்று, அம்மனுக்கு அபிஷேகம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர்.