வரத்து குறைவால் மீன் விலை ‘விறுவிறு’
தமிழகத்தில், கடந்த மாதம் 15ம் தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளது. இந்த காலகட்டத்தில், சிறிய ரகமான கட்டுமரங்கள் மற்றும் பைபர் படகுகளில் மட்டுமே, மீன்பிடிக்க அனுமதி உள்ளது.
அதில் குறிப்பிட்ட நாட்டிக்கல் மைல் துாரம் வரை சென்று, மீனவர்கள் மீன்பிடித்து வருவர். இதனால், மீன் வரத்து, நான்கில் ஒரு பங்காக குறைந்துள்ளது. இதனால் விலையும் சமீபமாக கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, மீன் வரத்து வெகுகுறைவாகவே இருந்தது. குறிப்பாக, வவ்வால், பாறை, சீலா, பெரிய இறால், கடம்பா நண்டு உள்ளிட்டவற்றின் வரத்து இல்லை.
வரத்து இருந்த மீனும், அதிக விலைக்கு விற்பனையானதால், விரும்பும் மீன் வாங்க முடியாமல், மீன்பிரியர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
தங்கம் போல் வஞ்சிரம்
மீன் பிரியர்களின் முதல் தேர்வாக கருதப்படும் வஞ்சிரம் மீன், சாதாரண நாட்களிலேயே, 1,000 ரூபாய்க்கு விற்பனையாகும். நேற்று, 1,800 ரூபாய் வரை விற்பனையானது. மீன்பிடித் தடைக்காலம் முடிய, 34 நாட்கள் இருப்பதால், வஞ்சிரம் மீனின் விலை, 2,000 ரூபாயை தாண்ட கூடும்.
அதே போல், வவ்வால், பாறை, பெரிய இறால் உள்ளிட்ட மீன் வகைகளின் விலையும், 1,000 – 1,500 ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.