‛‛ஆபரேஷன் சிந்துார்”-ல் பங்கேற்ற அச்சம் அறியா இந்திய சிங்கப் பெண்கள்!!

 பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ‛ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலில் நமது ராணுவ மற்றும் விமானப்படை பெண் வீராங்கனைகளும் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத முகாம்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தி அவற்றை அழித்துள்ளது இந்தியா. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைகள் ஈடுபட்டன. தாக்குதல் நடத்திய குழுக்களில் நமது நாட்டு பெண் வீராங்கனைகளும் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப் பெண்கள்

இதை உறுதிப்படுத்தும் விதமாக, ஆபரேஷன் சிந்துார் பற்றி ராணுவ அமைச்சகம் சார்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் 2 பெண் அதிகாரிகள் முக்கிய பங்கு வகித்தனர். ராணுவ கர்னல் சோபியா குரேஷி, விமானப்படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோரே அந்த வீராங்கனைகள்.

பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது எப்படி என்று அவர்கள் இருவரும் விளக்கினர். இந்த தாக்குதலில் இவர்களின் பங்கு என்ன என்று நேரடியாக விளக்கப்படாவிட்டாலும், இவர்களும் தாக்குதலில் பங்கெடுத்ததாக கூறப்படுகிறது.

பெண் அதிகாரிகள் ஏன்?

இரண்டு பெண் அதிகாரிகளை வைத்து, தாக்குதல் பற்றி விளக்கப்பட்டதன் பின்னணியில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. பஹல்காம் தாக்குதலில் ஹிந்து ஆண்களாக பார்த்து பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.

இதனால் பல ஹிந்து பெண்கள் கணவனை இழந்து சோகத்தில் ஆழ்ந்தனர். ஹிந்து மத வழக்கப்படி பெண்கள் நெற்றியில் திலகம் (சிந்துார்) இட்டுக்கொள்வது வழக்கம். பயங்கரவாதிகளின் கொடூர செயலால் இந்த ஹிந்து பெண்கள் திலகத்தை இழந்தனர்.

‛ஆபரேஷன் சிந்தூர்’ வடிவமைப்பின் அர்த்தம் என்ன?

இந்த கொடுமைக்கு பதில் அளிக்கும் விதமாகவே தாக்குதலுக்கு ‛ஆபரேஷன் சிந்துார்’ என பெயரிடப்பட்டது. மத்திய அரசு வெளியிட்ட ஆபரேஷன் சிந்தூர் என்ற வார்த்தையின் ஆங்கில எழுத்துகளில் ‘O’ என்ற எழுத்து குங்கும டப்பா வடிவத்திலும், அந்த டப்பாவிலிருந்து குங்குமம் சிதறி கிடப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிக்கு கணவர்களை இழந்த ஹிந்து பெண்கள் நெற்றி குங்குமத்தை இழந்ததை குறிக்கிறது. அது மட்டுமல்லாமல், பேடித்தனமாக பெண்களை விதவைகளாக்கிய பயங்கரவாதிகள் மீது அச்சம் என்பதை அறியாத எங்கள் நாட்டு பெண்கள் தாக்குவார்கள் என்பதையும் இந்தியா காட்டி உள்ளது. இதை உணர்த்தும் விதமாகவே தாக்குதலில் வீராங்கனைகள் ஈடுபடுத்தப்பட்டனர். பெண்களை வைத்தே தாக்குதல் பற்றியும் விளக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *