இந்திய ராணுவத்துக்கு காங்., எம்.பி ராகுல் பாராட்டு; தலைவர்கள் கருத்து
சிந்தூர் ஆபரேஷன் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த, இந்திய ராணுவ படைக்கு காங்கிரஸ் எம்.பி., ராகுல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர், ஜெய்சங்கர்
இந்திய எல்லைகளில் தொடர் ரோந்து பணியில் சுகாய் விமானம் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சகிப்புத் தன்மையில் இருந்து உலக நாடுகள் வெளி வரவேண்டும்.
இது குறித்து ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், ”நமது ஆயுதப் படைகளை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர், கார்கே
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களில் தாக்குதல் நடத்திய நமது இந்திய ஆயுதப் படைகளைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். அவர்களின் மன உறுதியையும் தைரியத்தையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த நாளிலிருந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் எடுக்க காங்கிரஸ் ஆயுதப் படைகள் மற்றும் அரசாங்கத்துடன் உறுதியாக நிற்கிறது. காங்கிரஸ் நமது ஆயுதப் படைகளுக்கு ஆதரவாக நிற்கிறது. தேசிய நலன் நமக்கு மிக உயர்ந்தது.
ஜெய்ஹிந்த்…!
ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் கி சேனா என பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு
பயங்கரவாத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ”பயங்கரவாதத்திற்கு எதிரான இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கு ஆதரவாக இருப்போம். ராணுவத்துடன், தேசத்துடனும் தமிழகம் எப்போதும் துணை நிற்கும்” என ஸ்டாலின் கூறியுள்ளார்.
நிலை நாட்டப்பட்டது நீதி!
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: பிரதமர் மோடியின் விழிப்புடன் கூடிய தலைமையின் கீழ், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும், மக்களை பாதுகாப்பதற்கும் நமது நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க., செயல் தலைவர், அன்புமணி
காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் கட்டமைப்புகளை அழிக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த 9 பயங்கர முகாம்கள் மீது இந்தியாவின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தியுள்ளன.
நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய அனைத்து நடவடிக்கைகளும் சரியானவை; தேவையானவை. இதில் மத்திய அரசுக்கும், முப்படைகளுக்கும் அனைவரும் துணை நிற்க வேண்டும்.
ரஜினி வரவேற்பு
பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகிய இருவரையும் அவர் பாராட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள பதிவின் விவரம் வருமாறு; போராளியின் போராட்டம் தொடங்கி உள்ளது. நோக்கம் நிறைவேறும் வரை இனி நிற்காது. இந்த நாடு முழுவதும் உங்கள் பின்னே நிற்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.