திருச்சூர் பூரம் திருவிழா கோலாகலம்: 30 யானைகள் அணிவகுத்து ‘குடை மாற்றம்’

கேரள மாநிலத்தில், புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், 30 யானைகள் அணிவகுத்து நின்று, வண்ணக்குடை மாற்றும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.

கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூரம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடபாண்டு, பூரம் திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது.

வடக்குநாதரை வணங்கி நெய்தலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவகுமார் என்ற யானை மீது எழுந்தருளி, தெற்கு கோபுர நடை திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் ஒரு பகுதியாக செம்பூக்காவு பகவதி அம்மன், ஆசியாவின் மிக உயரமான யானையான தெச்சிக்கோட்டுக்காவு ராமச்சந்திரன் மீது எழுந்தருளினார்.

அதன்பின் ‘இலஞ்சித்தறைமேளம்’ என்ற செண்டை மேளம் இசைக்கப்பட்டன. 250க்கு மேற்பட்ட இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு, பிரபல செண்டை மேள வித்வான் கிழக்கூட்டு அனியன் மாரார் தலைமை வகித்தார். மூன்று மணி நேரத்துக்கு இடைவிடாமல் நடந்த செண்டை மேள இசை பக்தர்களை பரவசப்படுத்தியது.

இதையடுத்து, மாலை, 5:30 மணிக்கு 30 கோவில் யானைகளின் மீதும் அமர்ந்திருந்தவர்கள் முத்துமணி மாலையுடன் கூடிய வண்ணக் குடையை மாற்றினர். இரு தரப்பினர் போட்டி போட்டு நடத்திய ‘குடை மாற்றும்’ நிகழ்ச்சியை கோவில் வளாகத்தில் திரண்டு இருந்த பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இரவு பாரமேக்காவு மற்றும் திருவம்பாடி கோவில் உற்சவ கமிட்டிகளின் பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

பூரம் விழா முன்னிட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தி தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *