தி.மு.க.,வை வீழ்த்த போடும் மனக்கணக்கு தப்புக்கணக்காக முடியும்; முதல்வர் ஸ்டாலின்

தி.மு.க.,வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிப்பவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் சுருக்க விவரம் வருமாறு;

இந்தியாவின் பிற மாநிலங்களும் – கொள்கைரீதியாக நமக்கு என்றும் எதிரானவர்கள் ஆள்கின்ற மாநிலங்களும்கூட திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றும் வகையில் முன்னோடியான அரசாக – முதன்மையான அரசாகத் தமிழத்தை இந்த நான்காண்டுகளில் உயர்த்தியிருக்கிறோம்.

நலன் தரும் திட்டங்கள் -நாடு போற்றும் சாதனைகளுடன் ஐந்தாவது ஆண்டில் திராவிட மாடல் அரசு பெருமிதத்துடன் அடியெடுத்து வைக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளும் இந்த நல்லாட்சி தொடரும் என்பதைத் தமிழக மக்களின் மனநிலை காட்டுகிறது.

மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்திடக் களத்தில் கடுமையாக உழைத்திட வேண்டும். அரசியல் எதிரிகளால் நமது ஆட்சியைக் குறை சொல்ல முடியாத காரணத்தால் அவதூறு சேற்றை வீசுகிறார்கள். ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள். அதிகார அமைப்புகளை ஏவி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். இந்தப் பூச்சாண்டிகளுக்கு மிரள்வதற்கு அடிமைக் கட்சியல்ல, நம் தி.மு.க.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த 505 வாக்குறுதிகளில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாத சாதனைத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டு, மக்களுக்குப் பயனளித்து வருகின்றன. இன்னும் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் இருப்பதை நான் மறக்கவுமில்லை, மறுக்கவுமில்லை. அவற்றையும் நிறைவேற்றிட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறேன்.

இனி ஓராண்டு காலம் நமக்குத் தேர்தல் பணிகளே முதன்மையானதாக இருக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு, மாவட்ட செயலாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செயல்பாடுகள் அமைந்திட வேண்டும்.

தமிழகத்தில் 1,244 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் மக்கள் பெற்றுள்ள பயன்களையும் ஒவ்வொரு இடத்திலும் எடுத்துரைக்க வேண்டும். இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பயணத் திட்டம், காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களைத் தேடி மருத்துவம், புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் போன்ற முத்திரைத் திட்டங்களால் மக்கள் பெற்றுள்ள நன்மைகளைப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துரைப்பது அவசியமாகும்.

நீண்ட நேரம் உரையாற்ற வேண்டிய கட்டாயமில்லை. எளிமையாக – இனிமையாக – சுருக்கமாக – கேட்பவரைக் கவர்கின்ற வகையில் எடுத்துரைத்தாலே’அரசின் திட்டத்தால் பயன் பெற்றுள்ள தமிழக மக்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.

நம்மை எதிர்ப்பவர்கள் தங்கள் மேடைகளில் பொய்யாக – மோசமாக – ஆபாசமாக – அருவருப்பாகப் பேசினாலும், நமது பேச்சாளர்கள் கண்ணியக்குறைவான சொற்களைப் பயன்படுத்திடக் கூடாது.

ஆட்சிக்கு வந்த நான்காண்டுகளில் சொன்னதைச் செய்தது மட்டுமின்றி, சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை எடுத்துச் சொன்னாலே போதும். குறைகுடங்கள் கூத்தாடுவது போல, நிறைகுடமான நாம் இருந்திட வேண்டியதில்லை.

பல வேலைச் சூழல்களுக்கிடையதான் பொதுக்கூட்டங்களில் பேசப்படுவதைப் பொதுமக்கள் உற்று கவனிக்கிறார்கள். அவர்களின் மனதில் பதியக்கூடிய வகையில், நிமிட நேரத்தில் செய்தியின் சாரத்தைச் சொல்லக்கூடிய ஆற்றல் மிக்கவர்களாக நம் சொற்பொழிவாளர்கள் இருந்திடுவது அவசியம்.

சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துத் தமிழ்நாட்டுக்கு துரோகமிழைப்பவர்களும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளும் தி.மு.க.வை வீழ்த்திவிட முடியாதா எனத் தொடர் தோல்வியின் ஆற்றாமையில் தவிக்கிறார்கள். அவர்களின் மனக்கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்பதைச் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் போடுகிற கணக்கு தீர்மானிக்கும்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *