இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம்; ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விவாதித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது. இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

”தவறு செய்யாதீர்கள்; ராணுவ நடவடிக்கைகள் தீர்வாகாது. போர் வேண்டாம்,” என, இந்தியா, பாகிஸ்தானை, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். இந்தியா – பாக்., விவகாரம் குறித்து ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ஆலோசனை கூட்டம் நடந்த நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் இந்த கருத்தை தெரிவித்தார்.

இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் ஐ.நா., பாதுகாப்பு சபை முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியது. பாதுகாப்பு சபை தற்காலிக உறுப்பினரான பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி தூதர் சையத் அக்பருதீன் கூறியதாவது:

பாதுகாப்பு கவுன்சில் வாயிலாக எந்த முடிவையும் எதிர்பார்க்க முடியாது. பாகிஸ்தானின் இத்தகைய முயற்சிகளை இந்தியா எதிர்கொள்ளும் என்றார். இந்த ஆலோசனை தொடர்பாக, ஐ.நா.வுக்கான பாகிஸ்தானின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் அசிம் இப்திகார் அகமது நிருபர்கள் சந்திப்பில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *