தனியாருக்கு சொந்தமான இடம், காலியிடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றம்
‘தனியாருக்கு சொந்தமான இடங்கள், காலியிடங்களில் குப்பை கொட்டுவது தண்டனைக்குரிய குற்றம்’ என, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தாலுகா, அத்திப்பட்டு கிராமத்தில் குப்பை கொட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே, குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும், ஏற்கனவே கொட்டப்பட்ட குப்பையை அகற்றவும் உத்தரவிட வேண்டும்’ என, திருவள்ளூர் கத்திவாக்கத்தைச் சேர்ந்த குமரேசன் சூளுரான் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
அகற்றம்
இதை விசாரித்த தீர்ப்பாயம், அத்திப்பட்டு கிராமத்தில் குப்பை கொட்டுவதை தடுப்பதுடன், அங்குள்ள குப்பையை அகற்றவும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கை மீண்டும் விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
அத்திப்பட்டு கிராமத்தில் பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு எதிரே, கொசஸ்தலை ஆற்றங்கரையில் கொட்டப்பட்டிருந்த திடக்கழிவுகள் முழுமையாக அகற்றப்பட்டு விட்டதாக, அத்திப்பட்டு ஊராட்சி தெரிவித்துஉள்ளது.
இதை, தன் ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ள தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம், அங்கு எடுக்கப்பட்ட படங்களையும் தாக்கல் செய்துள்ளது.
தடை
கழிவுகளை அகற்றும் போது, ‘பொக்லைன்’ இயந்திரங்களால் ஏற்பட்ட பள்ளங்களை சரிசெய்து, பழைய நிலைக்கு மீட்டெடுக்க, அத்திப்பட்டு ஊராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி திடக்கழிவுகளை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் பெற்ற இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.
தனியார் சொத்துக்கள், காலி நிலங்கள், திறந்தவெளிகளில் கழிவுகளை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது.
இது, சுற்றுச்சூழல் சட்டங்களின்படி, தண்டனைக்குரிய குற்றம். பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க, பரிந்துரைக்கப்பட்ட கழிவு மேலாண்மை நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.