ஜூன் 1ல் கூடுகிறது தி.மு.க., பொதுக்குழு!

மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ”சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தலைமை முடிவு செய்யும்” என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் தெரிவித்தார்.

சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர், மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 1,244 இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

நாடு போற்றும் நான்காண்டு, தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது. அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி அரசியல் செய்யும் மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தலைமை முடிவு!

தி.மு.க., மா.செ., கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தலைமை முடிவு செய்யும். நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற செய்வது உங்கள் கடமை. சட்டசபை தேர்தலில் திறமையானவருக்கே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.

அமைச்சர்கள் இனி சென்னையில் இருப்பதை விட தங்கள் மாவட்டத்தில் அதிக நேரம் செலவிட வேண்டும். அரசியல் ரீதியாக நம்மை வெல்ல முடியாதவர்கள், மிரட்டல் மூலம் அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள். பா.ஜ., எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது.

பா.ஜ.,வை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம். பயத்தில் தான் பா.ஜ., கூட்டணியை இ.பி.எஸ்., ஏற்றுக்கொண்டார். நமது பலமே கட்சியின் கட்டுமானம் தான். இந்த கட்டமைப்பு எந்த கட்சிக்கும் இல்லை. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *