வான்வெளியை மூடியது பாகிஸ்தான்: ஆண்டுக்கு ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி இழப்பு!

பாகிஸ்தான் தனது வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியதால், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ.5,081 கோடி) இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டு உள்ளது.

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக மத்திய அரசு, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து உள்ளது. அந்நாட்டுடன் உறவு துண்டிப்பு, விசா ரத்து போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பாகிஸ்தானும் தங்கள் நாட்டு வான்வெளியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

வட அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ஆகியவற்றுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து கிளம்பி வரும் விமானங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. வான்வழியை இந்திய விமானங்களுக்கு மூடியதால், ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பு படி ரூ.5,081 கோடி) இழப்பு ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

வான்வெளி கட்டுப்பாடுகள் எரிபொருள் நுகர்வு அதிகரிப்பதற்கும் நீண்ட விமான கால அளவிற்கும் காரணமாக இருப்பதால், வட இந்திய நகரங்களில் இருந்து இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு கூடுதல் வாராந்திர செலவுகள் ரூ.77 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகளைக் குறைக்க உதவும் மாற்று வழிகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை விமான நிறுவனம் பரிசீலித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. சவால்களை சமாளிக்க விமான நிறுவனம் அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *