ஆட்சிக்கு உறுதுணையாக இருங்கள்: தொழிலாளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
”தி.மு.க., ஆட்சிக்கு தொழிலாளர்கள் என்றைக்கும் பக்க பலமாக இருக்க வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
உலக உழைப்பாளர்கள் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
உருண்டோடுகிற ரயிலை ஓட்டக்கூடியவர் ஒரு தொழிலாளி. இழையை நுாற்று நல்லாடை நெய்பவரும் தொழிலாளி தான். இரும்பு காய்ச்சி உருக்குபவரும் தொழிலாளி தான். தொழிலாளர் இனம் மகிழ்ந்து கொண்டாடும் திருநாள் மே தினம்.
கடந்த நான்கு ஆண்டுகளில், 28 லட்சத்து 87 ஆயிரத்து 382 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, 2,461 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளோம்.
உணவு மற்றும் பிற பொருட்களை டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்கும், உப்பளத் தொழிலாளர்களுக்கும் தனி நல வாரியம் அமைத்து உள்ளோம்.
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளில், உயிரிழந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி, அதையும் நிறைவேற்றி தந்து கொண்டிருக்கிறோம்.
காரல் மார்க்ஸ் சிலையை விரைவில் சென்னையில் அமைக்க உள்ளோம். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகி வருவதால், தொழிலாளர்கள் வளர்ந்து வருகின்றனர்.
தொழில் வளர்ச்சிக்கு இலக்கு வைத்திருப்பது போல், தொழிலாளர் வளர்ச்சிக்கும் இலக்கு வைத்து, தி.மு.க., அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் தி.மு.க., ஆட்சிக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.