200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெல்லும்: செங்கோட்டையன்
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஆசனுார் அருகே உள்ள அரேபாளையத்தில், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், நேற்று மே தின விழா பொதுக் கூட்டம் நடந்தது.
அதில் பங்கேற்று, கட்சியின் அமைப்பு செயலரும், எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன் பேசியதாவது:
அ.தி.மு.க., ஆட்சி காலங்களில் மக்களுக்கான பல்வேறு பயனுள்ள திட்டங்கள் தீட்டப்பட்டு, அவை முழுமையாக செயல்படுத்தப்பட்டன. எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே அ.தி.மு.க., இப்படித்தான் செயல்பட்டு வருகிறது.
இதனால், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து, அவர்கள் சந்தோஷமாக வாழும் நிலை உருவானது. ஆனால், இப்போது அது தலைகீழாக மாறி இருக்கிறது.
மக்களுக்காக தீட்டப்படுவதாக சொல்லப்படும் எந்த திட்டம் வாயிலாகவும் மக்கள் பயன் பெறவில்லை.
ஊராட்சிகளை, நகராட்சி பகுதியோடு இணைக்கக்கூடாது என, அ.தி.மு.க., போராட்டம் நடத்தியது. அதன் பின்னரே, அந்த முயற்சி கைவிடப்பட்டது.
தமிழகம் முழுதும் 80 லட்சம் குழந்தைகளுக்கு, சத்துணவு வழங்கிய ஒரே தலைவர் எம்.ஜி.ஆர்., தான். இதை யாராலும் மறுக்க முடியாது.
நான் அமைச்சராக இருந்த போது, ஒரு லட்சம் பேருக்கு வேலை வாங்கி கொடுத்திருக்கிறேன். அதனால், நான் அடித்துச் சொல்வேன், தமிழகம் முழுதும் அ.தி.மு.க., கூட்டணி 200 தொகுதிகளில் வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.