எம்.எல்.ஏ., மயிலை வேலு இல்ல திருமணம் முதல்வர், துணை முதல்வர் நடத்தி வைப்பு
மயிலாப்பூர் தொகுதி தி.மு.க., – எம்.எல்.ஏ., மயிலை த.வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் தலைமை வகித்து நடத்தி வைத்தார். தி.மு.க., தலைமை அலுவலகமான அறிவாலயத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருக்குவளை வீடு போல அமைக்கப்பட்டிருந்த அரங்கில் திருமணவிழா நடந்தது.
மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ., – த.வேலு – சுசீலா தம்பதியின் மகள் அனுஷா, சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லுாரியில் பி.காம்., முடித்தவர். சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படித்து வருகிறார்.
ரங்கராஜன் – லதா ரங்கராஜன் மகன் தருண் தன்ராஜ், மயிலாப்பூரில் உள்ள விவேகானந்தர் கல்லுாரியில் பி.காம்., முடித்து, சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் படித்து வருகிறார்.
அஷனா – தருண் தன்ராஜ் திருமணம், சென்னை அறிவாலயத்தில் நேற்று நடந்தது.
இதற்காக, அறிவாலயத்தில் உள்ள அரங்கில், ‘ஆடுகளம்’ திரைப்படப்புகழ் கலை இயக்குனர் துரைராஜ் கைவண்ணத்தில், திருக்குவளையில் உள்ள கருணாநிதியின் பூர்வீக இல்லம், தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.
கருணாநிதி வீட்டு வாசலில் திருமணம் நடப்பதாகவும், தி.மு.க.,வின் குடும்ப விழா என்பதை பறை சாற்றும் வகையிலும் அமைந்தது.
முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஆகியோர், மாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர். மணமக்களுக்கு பசுமை மரக்கன்று பரிசு பெட்டகத்தை வழங்கி வாழ்த்தினர்.
விழாவில், துணை முதல்வர் உதயநிதி, தி.மு.க., துணை பொதுச்செயலர் அந்தியூர் செல்வராஜ், அமைச்சர்கள் கே.என்.நேரு, ராஜகண்ணப்பன், முத்துசாமி, சாமிநாதன், ரகுபதி, மகேஷ், கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் மற்றும் எம்.பி.,க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி, கலாநிதி வீராசாமி ஆகியோரும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். கூட்டணி கட்சிகளின் தலைவர்களில், மா.கம்யூ., மாநில செயலர் சண்முகம், வி.சி., தலைவர் திருமாளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விதவித உணவுகள்
திருமண விழாவை முன்னிட்டு, காலையில் 15 வகை டிபன் பரிமாறப்பட்டது. மதியம், 25 வகைகளுடன் அறுசுவை உணவு விருந்து அளிக்கப்பட்டது.
மணமக்களை வாழ்த்த வந்த அனைவருக்கும், கவிஞர் பாரதிதாசன், திருக்குறள் புத்தகங்களும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
மாலையில், சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள அகார்ட் மெட்ரோ பாலிட்டன் ஹோட்டலில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைப்பட பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர்.