ரூ.47 கோடியில் திட்ட பணிகள் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பு
முதல்வர் ஸ்டாலின், கொளத்துார் தொகுதியில் பல்வேறு இடங்களில், 47 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின், தான் தேர்ந்தெடுக்கப்பட்ட கொளத்துார் சட்டசபை தொகுதிக்கு நேற்று வந்தார். பெரம்பூர் ஜமாலியாவில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 130 பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினார்.
தொடர்ந்து, பெரம்பூர் பந்தர் கார்டன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில், 8.63 கோடி ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார்.
திரு.வி.க.நகர் மண்டலத்தில், 42 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை இடித்துவிட்டு மூன்று கோடி ரூபாயில் புதிதாக கட்டுதல் மற்றும் பராமரிப்பு பணிகளை துவக்கி வைத்தார். மேலும், அதே மண்டலத்தில், 112 மின்மாற்றி தடுப்பு அமைக்கும் பணியை துவக்கி வைத்தார்.
ராஜா தோட்டத்தில், மூன்று கோடி ரூபாயில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய பல்நோக்கு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
சிவசக்தி நகர் கழிவுநீர் உந்து நிலையத்தில், 1.16 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள, நவீன தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகளை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து, 6.90 கோடி ரூபாயில், பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, ராஜா தெருக்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 67 வது வார்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின், கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் சென்ற முதல்வர், உதவி வேண்டி மனு அளித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு, அதிநவீன அமரர் ஊர்தி மற்றும் ஆம்புலன்ஸ்களை வழங்கினார்.
கடைசியாக, ஜி.கே.எம் காலனி, 12 தெருவில் உள்ள ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள, அரசு மாணவர்களுக்கான உயர்கல்வி பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.
மொத்தம், 47 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.
பின், நிருபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ”நாங்கள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. வரும் தேர்தலில் 200 தொகுதிகள் மட்டுமல்ல; அதற்கு மேலும் வெல்வோம்,” என்றார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் நேரு, அன்பரசன், மகேஷ், சேகர்பாபு, எம்.பி., கலாநிதி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.