வீடு வாங்கியோரிடம் பாக்கியை வசூலிக்க நகர்ப்புற வாழ்விட வாரியம் புதிய திட்டம்
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்க, புதிய நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் இதுவரை, 2.25 லட்சம் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், ஏழை மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 34,413 பேர் மட்டுமே தவணை நிலுவையை முடித்து, விற்பனை பத்திரங்கள் பெற்றுள்ளனர்.
பெரும்பாலான நபர்கள் தவணையை முழுமையாக முடிக்காததால், விற்பனை பத்திரம் பெறாமல் உள்ளனர். இந்த விஷயத்தில், ஒதுக்கீட்டாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதில் காணப்படும் பிரச்னைகள் குறித்து ஆராய்ந்து, சில புதிய நடவடிக்கைகள் எடுக்க வாரியம் முடிவு செய்துள்ளது.
இதற்காக, தவணை நிலுவை குறித்த விபரங்களை, ஒதுக்கீட்டாளர்களுக்கு தனித்தனியாக தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வாரிய திட்டங்களில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களில் பலர், தவணையை செலுத்தி முடிப்பதற்குள், அந்த வீட்டை வேறு நபர்களுக்கு விற்று விடுகின்றனர். சில இடங்களில் ஒதுக்கீடு பெற்ற நபர் இறந்து போன நிலையில், வாரிசு யார் என்பதை முடிவு செய்வதில் பிரச்னை உள்ளது.
இதுபோன்ற பிரச்னைகளை கண்டறிந்து, அவற்றை தீர்த்து, விரைவாக விற்பனை பத்திரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
தவணை நிலுவை குறித்து, ஒதுக்கீட்டாளர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவித்து, விற்பனை பத்திரம் பெற அழைக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
இதன் வாயிலாக, நிலுவை தொகையை செலுத்துவோர், உடனடியாக விற்பனை பத்திரம் பெற வாய்ப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.