அவசர எண்களுக்கு அழைத்த 69,628 பேருக்கு போலீசார் உதவி
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
அவசர உதவி எண்: 100க்கு வரும் அழைப்புகள், மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து பெறப்பட்டு சென்னை பெருநகர போலீஸ் ரேடியோ பிரிவு வாயிலாக, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, ஐந்து நிமிடங்களில் உதவி கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, கமிஷனர் அருண் மற்றும் கூடுதல், இணை, துணை கமிஷனர்களின் கண்காணிப்பில், 234 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், சட்ட உதவி செய்யவும், உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி பெற்ற எஸ்.ஐ.,க்கள், போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். அத்துடன், திருவல்லிக்கேணி, அடையாறு, கீழ்ப்பாக்கம் என பிரிக்கப்பட்டுள்ள, 12 காவல் மாவட்ட எல்லைகளிலும், வெள்ளை நிற கிரிஸ்டா, இன்னோவா, ஜிப்சி பொலிரோ என, தலா மூன்று ரோந்து வாகனங்களில், 24 மணி நேரமும், எஸ்.ஐ.,க்கள் மற்றும் போலீசார் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஆண்டில், நான்கு மாதங்களில் அவசர எண்கள் வாயிலாக தொடர்பு கொண்ட 69,628 பேருக்கு, விரைந்து சென்று குறைகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.