சிம்லா ஒப்பந்தம் முடக்கப்பட்டதால் யாருக்கு சாதகம்; யாருக்கு பாதகம்?
இந்தியா – பாகிஸ்தான் இடையே, 1972ல் கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக பாகிஸ்தான் மிரட்டியுள்ள நிலையில், அது ரத்து செய்யப்பட்டால், அது அந்நாட்டிற்கே பாதகமாக அமையும் என கூறப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
பதிலுக்கு பாகிஸ்தானும் அதே போன்ற சில தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என்பதும் ஒன்றாகும்.
கடந்த, 1971ல் நடந்த இந்தியா – பாக்., போரில், 90,000 பாக்., வீரர்கள் நம் ராணுவத்திடம் சரண் அடைந்தனர். அந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து, கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்து வங்கதேசம் உருவானது.
இந்த போர் முடிந்து சில மாதங்களுக்கு பின், 1972, ஜூலை 2ல் சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா மற்றும் பாக்., பிரதமர் சுல்பிகர் அலி புட்டோ இடையே, ஹிமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, இந்தியா – பாக்., எல்லையில் அசல் கட்டுப்பாட்டு கோட்டை அங்கீகரிப்பதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.
இந்த சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்யப்போவதாக பாகிஸ்தான் தற்போது மிரட்டியுள்ளது. இது அந்நாட்டிக்கே பாதகமாக அமையும் என, வெளியுறவுத்துறை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிம்லா ஒப்பந்தம் ரத்தானால் ஜம்மு – காஷ்மீரை வெளிப்படையாக பாக்., உரிமை கொண்டாட துவங்கும். அமைதி பேச்சையும், போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மதிக்காது.
சீனா போன்ற பாக்., ஆதரவு நாடுகள் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கும். இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவளிக்கும். இதனால் போர் பதற்றம் அதிகரிக்கும்.
இறுதியில் இது பாகிஸ்தானுக்கே நெருக்கடியாக மாறும் என, நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.