ரூ.51 கோடியில் அம்பராம்பாளையம் குடிநீர்: சட்டசபையில் அமைச்சர் நேரு விளக்கம்
”கோவை அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படவுள்ளது,” என, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு கூறினார்.
கோவை மாவட்டம், புரவிப்பாளையம் ஊராட்சி, அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தின் வாயிலாக, புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகளில் நீரேற்றம் செய்ய வேண்டும் என்ற கவன ஈர்ப்பு தீர்மானத்தை, பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ., ஜெயராமன் கொண்டு வந்தார்.
இதற்கு அமைச்சர் நேரு அளித்த பதில்:
அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, புரவிப்பாளையம் ஊராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு முறையாக சுத்திகரிக்கப்பட்டு, மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கூட்ட குடிநீர் திட்டம், 2005ம் ஆண்டு முடிக்கப்பட்டு, பராமரிப்பில் உள்ளது. இதில், 15 ஆண்டுகள் கடந்த நிலையில் பம்ப் செட்களில் அடிக்கடி ஏற்படும் பழுதுகளால் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்க இயலவில்லை.
எனவே, 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டத்தை மேம்படுத்த, நிர்வாக அனுமதி வழங்கப்பட உள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்கப்படும்.
ஜல் ஜீவன் திட்டம் மற்றும் ஊராட்சி நிதி வாயிலாக, கூடுதலாக கட்டப்பட்ட தரைமட்ட மற்றும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு அம்பரம்பாளயைம் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக குடிநீர் ஏற்றம் செய்து, பொது மக்களின் தேவைக்கு ஏற்ப குடிநீர் பகிர்ந்து அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.