ரூ.9 கோடி… வீணடிப்பு:மீண்டும் ரூ.6 கோடிக்கு பணி துவக்கிய மாநகராட்சி
சுற்றுச்சூழல் பூங்கா என்ற பெயரில், கடந்த ஆட்சியில் கொருக்குப்பேட்டையில் ஒன்பது கோடி ரூபாய் பணிகளை மேற்கொண்ட மாநகராட்சி, பூங்கா பராமரிப்புக்கான போதிய அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என, திட்டத்தை கைவிட்டது. மக்கள் வரிப்பணம் வீணான நிலையில், தற்போது அதே இடத்தில் ஆறு கோடி ரூபாயில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணிகளை மாநகராட்சி துவக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொருக்குப்பேட்டை, பாரதி நகர் 6வது தெருவில், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை, 2017 அ.தி.மு.க., ஆட்சியின்போது, மாநகராட்சி துவக்கியது. மொத்தம், ஒன்பது கோடி ரூபாய் செலவில், 5 ஏக்கர் பரப்பில் பணி நடந்தது.
நுாற்றுக்கணக்கான மரம், செடிகள், புல் தரை, சிறு குன்றுகள், சிற்பங்கள், 1 ஏக்கர் பரப்பில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடந்து முடிந்தது.
பூங்காவை ஒட்டியுள்ள பாரதி நகர், எழில் நகர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கானோர், இந்த பூங்கா திறப்பை பெரிதும் எதிர்பார்த்தனர். பணிகள், 90 சதவீதம் முடிந்த நிலையில், இப்பூங்காவை பராமரிக்க முடியாத நிலை இருப்பதாக கூறி, திட்டத்தை மாநகராட்சி கைவிட்டது.
சுற்றுச்சூழல் பூங்காவை பராமரிக்க தினம், 60,000 லிட்டர் தண்ணீர் தேவை. பூங்கா அருகே பகிங்ஹாம் கால்வாய் மற்றும் கொடுங்கையூர் கிளை கால்வாய் செல்கிறது. இதனால், நிலத்தடி நீரில் கழிவுநீர் கலந்து கடும் துர்நாற்றம் வீசியது.
இந்த தண்ணீரை பூங்காவிற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், பூங்காவை சுற்றி கால்வாய் உள்ளதால், மழைக்காலத்தில் கால்வாய் நீர் வெளியேறி, பூங்கா மூழ்கிவிடும் எனக்கூறி, 2018ல் திட்டம் கைவிடப்பட்டது. இதனால் மக்களின், ஒன்பது கோடி ரூபாய் வரிப்பணம் வீணானது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ப தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கொருக்குப்பேட்டை பாரதி நகரில் புதிதாக குடிநீரேற்று நிலையம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யும் வகையில், கைவிடப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா இடத்தில், 2 ஏக்கர் பரப்பளவில், 19.41 கோடி ரூபாய் செலவில், 13 எம்.எல்.டி., குடிநீரேற்று நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது சுற்றுச்சூழல் பூங்கா கைவிடப்பட்ட அதே இடத்தில், 3 ஏக்கர் பரப்பளவில், ஆறு கோடி ரூபாய் செலவில், சுற்றுச்சூழல்பூங்கா பணி மீண்டும் அமைக்கப்படும் என, சென்னை மாநகராட்சி அறிவித்து, பூமி பூஜை போட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பூங்கா அமையும் இடம் ஒதுக்குபுறமாக அமைந்துள்ளதால், சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க, இது ஏற்ற இடம் இல்லை. பெண்களால் இங்கு, மாலை 6:00 மணிக்கு மேல் வரமுடியாத நிலை உள்ளது. ஏற்கனவே, ஒன்பது கோடி ரூபாய் வீணாகிவிட்டது.
இங்கு, அரசு சார்பில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவித்த நிலையில், அத்திட்டம் துவங்காதது வருத்தமளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ., எபினேசர் கூறியதாவது:
அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்ட சுற்றுச்சூழல் பூங்கா பயனில்லாமல் போய்விட்டது. சுற்றுச்சூழல் பூங்காவில் போடப்பட்ட, ஒன்பது கோடி ரூபாய் நிதியும் வீணாகிவிட்டது. தற்போது மாநகராட்சி சார்பில் மீண்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
சுற்றுச்சூழல் பூங்காவை பராமரிக்க தினம் 60,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும் என்பதால், அப்பணிகள் கைவிடப்பட்ட நிலையில், தற்போது பூங்கா அருகிலேயே நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
எனவே, பூங்கா பராமரிப்பிற்கான தண்ணீர் கிடைத்து விடும். மழைக்காலத்தில் கால்வாய் நீர் பூங்காவில் வருவதை தடுக்க, மாற்று நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.