தேசிய திறனாய்வு போட்டியில் 12 பேர் தேர்வாகி முதலிடம்
திருவொற்றியூர், தேசிய திறனாய்வு போட்டியில், ராமநாதபுரம் – சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியைச் சேர்ந்த, 12 மாணவ – மாணவியர், தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
திருவொற்றியூர், ராமநாதபுரம் – சென்னை மாநகராட்சி நடுநிலை பள்ளியில், 600க்கும் அதிகமான மாணவ – மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2024 – 25 ம் ஆண்டிற்கான, தேசிய திறனாய்வு போட்டி, பிப்., 22, செங்குன்றத்தில் நடந்தது.
இதில், 6, 7, 8 ம் வகுப்புகளின், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் மற்றும் திறனாய்வு கேள்விகளை உள்ளடக்கி, 180 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில், ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் பங்கேற்று தேர்வெழுதினர்.
இதில், எட்டாம் வகுப்பு மாணவி கே.காவினி, திருவள்ளூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றார். தவிர, ஜி. வர்ஷா, ஏ.மிதுன், இ.எழிலரசி, எஸ்.தோஷிகா, எஸ்.இலக்கியா, டி.தாரிகா, ஜே.கே.சமிக் ஷா, வி.சாதனாஸ்ரீ. எஸ்.ரோஷன், பி.சிவரஞ்சினி, ஜெ.தனுஷ்னி உள்ளிட்ட, 12 மாணவ – மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம், திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்ட அளவில், அதிக மாணவர்கள் தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற பள்ளி என்ற பெருமையை, ராமநாதபுரம் – சென்னை மாநகராட்சி நடுநிலைப் பள்ளி பெற்று அசத்தியுள்ளது.
வெற்றி பெற்ற, 12 மாணவர்களுக்கும், 9 – 12 ம் வகுப்பு வரை, நான்கு ஆண்டுகளுக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் வீதம், 48 மாதங்களுக்கு, 48,000 ரூபாய் ஊக்கத்தொகை, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதன்படி, கடந்த ஆண்டுகளில் 58 பேர், தற்போதைய கல்வி ஆண்டில் 12 பேர் என, இப்பள்ளியைச் சேர்ந்த 70 மாணவ – மாணவியர் இந்த ஊக்கத் தொகையை பெறுவர்.
வெற்றி பெற்ற மாணவ – மாணவியரை, பள்ளி தலைமை ஆசிரியை முத்துசெல்வி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழுவினர் வெகுவாக பாராட்டினர்.