எரி உலை திட்டத்தை எதிர்த்து மே 25ம் தேதி மனித சங்கிலி
கொடுங்கையூர், வடசென்னை குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கொடுங்கையூரில் அமைய உள்ள எரி உலை திட்டதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கம், கொடுங்கையூரில் நடந்தது. இதில் நீரியல் ஆராய்ச்சியாளர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், நீரியல் ஆராய்ச்சியாளர் ஜனகராஜன் கூறியதாவது:
குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்கள், உலக அளவில் மூடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, சென்னையில் செயல்பட்டு வரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், உர தொழிற்சாலைகள், அனல் மின் நிலையங்களால் வடசென்னை மக்களுக்கு நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகம் உள்ளது.
குப்பையை மறுசுழற்சி செய்ய ஏராளமான வழிமுறைகள் உள்ளன. எனவே, குப்பையை எரித்து மின்சாரம் தயாரிக்கும் குறுகிய கால திட்டம் தீர்வாக அமையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டமைப்பின் தலைவர் டி.கே.சண்முகம் கூறுகையில், ”கொடுங்கையூர் குப்பை கிடங்கில் எரிஉலை திட்டத்தை செயல்படுத்தினால், அப்பகுதி மக்களின் வாழும் சூழல் கேள்விக்குறியாகும். பெரும் ஆபத்தை உருவாக்கக்கூடிய கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை வடசென்னை மக்களின் நலன் கருதி கைவிட வேண்டும்,” என்றார்.
கொடுங்கையூர் எரி உலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மே 25ம் தேதி, மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.