1.45 ஏக்கர் நிலத்துக்கு கேட்கும் விலை…ரூ.350 கோடி! கிளாம்பாக்கம் நடை மேம்பாலத்துக்கு சிக்கல்
சென்னை கிளாம்பாக்கம் ரயில் நிலையம் – பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கும் திட்டத்துக்கு, 1 ஏக்கர், 45 சென்ட் நிலத்தை தர, நில உரிமையாளர் 350 கோடி ரூபாய் இழப்பீடு கோருவது, புதிய பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது. சந்தை மதிப்பு, 60 கோடி ரூபாயாக உள்ள நிலையில், நடைமுறைக்கு சாத்தியமில்லாத தொகை கேட்பதால், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுாரை அடுத்த கிளாம்பாக்கத்தில், 40 ஏக்கரில், 400 கோடி ரூபாய் செலவில், புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, 2023 டிச., 30 முதல் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லவும், வெளியூரில் இருந்து வருவோர், அங்கிருந்து தங்கள் பகுதிக்கு செல்லவும், மாநகர பேருந்துகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. மெட்ரோ ரயில் சேவை இல்லாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதை கருத்தில் வைத்து ஊரப்பாக்கம் – வண்டலுார் இடையே, கிளாம்பாக்கத்தில் மின்சார ரயில்கள் நின்று செல்லும் வகையில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
பயணியர் வசதிக்காக, ரயில் நிலையத்தையும், பேருந்து நிலையத்தையும் இணைக்கும் வகையில், ஜி.எஸ்.டி., சாலையில், 74 கோடி ரூபாய் செலவில், 1,310 மீ., நீளத்துக்கு நடை மேம்பாலம் அமைக்க, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு, கடந்த ஆண்டு மார்ச்சில் அடிக்கல் நாட்டப்பட்டது.
ரயில் நிலையத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலை வரை, ௧ ஏக்கர், 45 சென்ட் நிலத்தை கையகப்படுத்த, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் வாயிலாக அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிவிக்கை சட்ட விதிகளின்படி சரியாக இல்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பழைய அறிவிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டது. விதிகளின்படி, புதிய அறிவிக்கை வெளியிட மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கான பணிகளில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், ‘நடை மேம்பாலத்துக்கு தேவையான நிலம் வழங்க, 350 கோடி ரூபாய் இழப்பீடாக அளிக்க வேண்டும்’ என, நில உரிமையாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த இடத்தின் சந்தை மதிப்பு 60 கோடி ரூபாயாக உள்ள நிலையில், நில உரிமையாளர் 350 கோடி ரூபாய் கேட்பதால், மாவட்ட நிர்வாகத்தினரும், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நடைமுறையில் சாத்தியமில்லாத வகையில், அதிகபட்ச தொகையை நில உரிமையாளர் கேட்பதால், இந்த விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என, சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
நில உரிமையாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த விவகாரத்தை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று தீர்வு காணவும், அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில், மேம்பால பணி நடந்து வருகிறது.