‘மாதம் 50,000 பேருக்கு பட்டா; மீண்டும் முதியோர் ஓய்வூதியம்’
தமிழகத்தில் வரும் டிசம்பருக்குள், 6.29 லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக, வருவாய் துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
சட்டசபையில் நேற்று, இத்துறையின் மானிய கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்து, அவர் பேசியதாவது:
கடந்த, 2000ம் ஆண்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு, நில வரன்முறை நடவடிக்கைகள் துவக்கப்பட்டன. அதன் அடிப்படையில், தகுதி வாய்ந்த மக்களுக்கு நிலத்துக்கான பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
வெவ்வேறு திட்டங்கள் வாயிலாக, அனைத்து பிரிவு மக்களுக்கும், வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், நடப்பாண்டில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 3.55 லட்சம் பட்டாக்கள் வழங்கப்பட்டு விட்டன. மீதம் உள்ள பட்டாக்களை மாதத்துக்கு, 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பகுதிகளில், வீடு வாங்கிய மக்களுக்கு நேரடியாக பட்டா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில், விடுபட்டவர்களுக்கு விரைவாக பட்டா வழங்கப்படும்.
சென்னையை சுற்றியுள்ள, ‘பெல்ட் ஏரியா’ பகுதியில் பட்டா வழங்க, 1962ல் தடை விதிக்கப்பட்டது. அதில் திருத்தம் செய்து, தற்போது பட்டா வழங்கும் பணி துவங்கியுள்ள நிலையில், இதற்கான விதிமுறைகளில் விரைவில் சிறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
முதியோர் ஓய்வூதியம்
பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கோரி, இ – சேவை மையங்கள் வாயிலாக வரும் விண்ணப்பங்களை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்கள் மீது, 15 நாட்களுக்குள் முடிவை தெரிவிக்க வேண்டும். ஆனால், பல இடங்களில் காரணம்கூறாமல், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால், மக்கள் மீண்டும் தாலுகா அலுவலகங்களுக்கு வந்து நிற்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால், இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் கேள்விக்குறியாகிறது. எனவே, நிராகரிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு, உரிய காரணங்களை தெரிவிக்க வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
மகளிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் துவங்கிய நிலையில், புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
ஒரே நபர் இரண்டு திட்டத்திலும் பயனாளி ஆகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கலெக்டர்கள் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட நபர்களுக்கு, விரைவில், புதிதாக முதியோர் ஓய்வூதியம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மெட்ராஸ் ரேஸ்கோர்ஸ், தோட்டக்கலை சங்கம், ஊட்டி ரேஸ் கோர்ஸ் வைத்திருத்த அரசு நிலம் மீட்கப்பட்டு,மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், 20,330 கோடி ரூபாய் மதிப்புள்ள, 35,650 ஏக்கர் அரசு நிலம், தனியாரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
மேய்க்கால் நிலத்துக்கு பட்டா
மேய்க்கால் புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வருகிறது. 2022ல் ஒரு வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பட்டா வழங்கக்கூடாது என்று கூறியுள்ளது. இதை கருத்தில் வைத்து, இவர்களுக்கு என்ன செய்வது என்று ஆராய்ந்து வருகிறோம், அதுவரை, மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் வசிப்போரை வெளியேற்றக் கூடாது என்று, உத்தரவிட்டு இருக்கிறோம்.இதேபோன்று, நீர்நிலை ஆக்கிரமிப்புகளில் வசிப்போர் கண்ணீர் விடாத வகையில், உரிய முறையில் மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.