1,000 ஓட்டுகளுக்கு ஒன்பது பொறுப்பாளர்கள் திருவொற்றியூரில் அ.தி.மு.க., ‘மாஸ்டர் பிளான்’
அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, பாகம் ஒன்றிற்கு, தலைவர், இரு துணை தலைவர்கள், செயலர், இரு இணை செயலர்கள், பொருளாளர் உட்பட ஒன்பது பேர் கொண்ட பொறுப்பாளர்கள் குழுவை நியமிக்க உத்தரவிட்டிருந்தார்.
பாக பொறுப்பாளர்கள் குழு அமைக்கும் பணியில், துவக்கம் முதலே ஆர்வம் காட்டி வரும் திருவொற்றியூர் மேற்கு பகுதி அ,தி.மு.க., 150 பூத்துகளுக்கு, தலா ஒன்பது பேர் வீதம் பாக பொறுப்பாளர்களை நியமித்து விட்டது.
பாக பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம், திருவொற்றியூர் தொகுதி அ.தி.மு.க., பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் சின்னையா, மாநில இளம்பாசறை நிர்வாகி சுபா, மாவட்ட செயலர் மூர்த்தி, பகுதி செயலர் குப்பன் தலைமையில், சில தினங்களாக நடந்து வருகிறது.
அதன்படி, நேற்று முன்தினம் இரவு, மணலியின், நான்கு வார்டுகளின், எட்டு வட்டங்களில் பாக பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. இதில், 20, 21, 22 ஆகிய வார்டுகளில், பூத்திற்கு தலா, ஒன்பது பேர் வீதம் நியமித்து, தொகுதி பொறுப்பாளர்களின் நன்மதிப்பை பெற்றனர்.
தவிர, 18வது வார்டு கிழக்கு வட்டத்தில் மட்டும், வட்ட செயலர் பட்டாபிராமன், கட்சியினரை பாக பொறுப்பாளர் குழுவில் சேர்க்காமல், முதியவர்களை, கட்சிக்கு வேலைக்கு சம்பந்தமில்லாதவர்களை பொறுப்பாளராக போட்டதாக கூச்சல் குழப்பம் நிலவியது.
குறுக்கிட்ட, பகுதி செயலர் குப்பன், பாக பொறுப்பாளர்கள் நியமனத்தில், கட்சியினரை சேர்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக செயல்படக்கூடாது. மீறும் பட்சத்தில் தலைமை நடவடிக்கை எடுக்கும் என, அவர் எச்சரித்தார்.