மாநகராட்சி பகுதிகளில் ட்டுமானம் கழிவு மேலாண்மை புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, ஏப். 3: மாநகராட்சிப் பகுதிகளில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. மாநகராட்சியின் சார்பில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாநகராட்சிப் பகுதிகளில் இந்த முக்கிய விதிமுறைகள் வரும் 21ம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. கச்சிறிய அளவில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாக்குவோர்(1 மெட்ரிக் டன் வரை): சிறிய வீடுகள் பழுதுபார்ப்பு, ஓடுகள், குளியல் தொட்டிகள், அலமாரிகள், வாஷ்பேசின்கள், உடைந்த பீங்கான், சானிட்டரி பொருட்கள் மூலம் 1 மெட்ரிக் டன் வரை கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை எப்போதாவது மிகச்சிறிய அளவில் கழிவுகள் உருவாக்குபவர்களிடமிருந்து மாநகராட்சியால் அடையாளம் காணப்பட்ட இடங்களான பக்கிங்ஹாம் கால்வாய் சாலை, சாத்தங்காடு, திருவொற்றியூர்(லாரி நிலையத்திற்கு அருகில், மண்டலம்-1), காமராஜ் சாலை(மண்டல அலுவலகம் அருகில்), சிஎம்டிஏ டிரக் டெர்மினல் இரவு தங்குமிடம் அருகே(மாதவரம் பேருந்து நிலையத்தின் பின்புறம்), கொடுங்கையூர் குப்பை கிடங்கு, தண்டயார்பேட்டை நெடுஞ்சாலை, பழைய கால்நடை கிடங்கின் ஒரு பகுதி, அவதானம் பாப்பியர் சாலை, சூளை(மாநகராட்சி பள்ளிக்கு எதிரில்), வானகரம் ரோடு, அத்திப்பேட்டை குப்பை கிடங்கு, 1வது பிரதான சாலை, ஷெனாய் நகர் (கஜலட்சுமி காலனி அருகில்), லாயிட்ஸ் காலனி (கார்ப்பரேஷன் ஐடிஐ நிறுவனம் அருகில்), குருசிவா தெரு, எஸ்.எம்.பிளாக், ஜாபர்கான்பேட்டை, கோடம்பாக்கம், நொளம்பூர் இரண்டாம் கட்டம், 2வது பிரதான சாலை (மதுரவாயல் தாலுகா அலுவலகம் அருகில்), நந்தம்பாக்கம் டி.பி.எப்., டிஎன் – 158ல் அடையார் ஆற்றங்கரை அருகே, வேளச்சேரி மெயின் ரோடு, குருநானக் கல்லூரிக்கு அருகில், வேளச்சேரி புதைகுழி, 200 அடி ரேடியல் ரோடு, பெருங்குடி குப்பை கிரவுண்ட், கங்கையம்மன் கோவில் தெரு விரிவாக்கம், காரப்பாக்கம் (தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம் அருகில்) ஆகிய 15 இடங்களில் கட்டட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை கட்டணமின்றி பெற்றுக்கொள்ளப்படும்

குடியிருப்பாளர்கள் தங்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சியின் 1913 என்ற மாநகராட்சியின் உதவி எண்ணிலும், நம்ம சென்னை செயலி மூலமும் பதிவு செய்து இலவச சேவையைப் பெற்றுக் கொள்ளலாம். கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாக்குவோர் (1 மெட்ரிக் டன் முதல் 20 மெட்ரிக் டன் வரை): கட்டடம் புதுப்பித்தல், மறுவடிவமைப்பு, பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளின் போது 1 மெட்ரிக் டன் முதல் 20 மெட்ரிக் டன் வரை கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை உருவாக்கும் சிறிய அளவில் கழிவுகள் உருவாக்குபவர்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்ட லாரி உரிமையாளர்களை தொடர்புகொண்டு கழிவுகளை ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யலாம். தாங்களாகவே கட்டடக் கழிவுகளை அகற்ற வாகனங்களை அமர்த்தலாம், மாநகராட்சி சேவையைப் பயன்படுத்தி மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.2500 கட்டணத்தில் கட்டடக் கழிவுகளை சேகரித்து ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்யலாம்.

எந்த முறைகளில் கழிவுகள் அகற்றப்பட்டாலும், அவற்றை கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கு எடை கணக்கீடு செய்யும் பணியாளர் மூலம் எடை கணக்கிடப்பட்டு அதற்கான கட்டணம் தெரிவிக்கப்படும். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி இணையதளம் மூலமாக பணம் செலுத்தப்பட்ட பின்னர் கட்டடக் கழிவுகள் குப்பை கொட்டும் வளாகங்களுக்குள் அனுமதிக்கப்படும். கழிவுகளை கொடுங்கையூர் அல்லது பெருங்குடி செயலாக்க மையங்களுக்கு கொண்டு சென்று பதப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்காக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.800 செலுத்த வேண்டும்.பெருமளவு கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாக்குவோர் (20 மெட்ரிக் டன்னிற்கு மேல்): ஒரு நாளில் 20 மெட்ரிக் டன்னிற்கு மேல் அல்லது ஒரு மாதத்திற்கு 300 மெட்ரிக் டன் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் உருவாக்குவோர், 600 சதுர மீட்டருக்கு சமமான அல்லது

அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட கட்டடத்தை இடிக்கும் பணிகளை மேற்கொள்பவர்கள், 6000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டுமானம் அல்லது பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொள்பவர்கள் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வாகனங்களை தாங்களாகவே அமர்த்தி கொடுங்கையூர் அல்லது பெருங்குடி செயலாக்க மையங்களுக்கு கொண்டு வர வேண்டும். செயலாக்க மையத்தில் மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.800 கட்டணம் வசூலிக்கப்படும். மாநகராட்சியின் இணையதளம் மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும்.

அபராதம் வகை – 1: மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மை குறித்த புதிய வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல், பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை முறையற்ற வகையில் கொட்டுபவர்களுக்கு அபராதமாக ரூ.5000 மாநகராட்சியின் சார்பில் வசூலிக்கப்படும்.
அபராதம் வகை – 2: மழைநீர் வடிகால், திறந்தவெளி மற்றும் பிற பொதுமக்களின் பயன்பாட்டுப் பகுதிகளில் வழிகாட்டுதல்களை மீறி கட்டுமான மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை கொட்டும் பெருமளவு கழிவுகள் உருவாக்குவோருக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.5000 கடுமையான அபராதமும், சிறிய அளவில் கழிவுகள் உருவாக்குவோர் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.3000 கடுமையான அபராதமும் விதிக்கப்படும்.
அபராதம் வகை – 3: கட்டடம் மற்றும் இடிபாட்டுக் கழிவு மேலாண்மைத் திட்டத்தின் நிபந்தனைகளைப் பின்பற்றாத 6000 சதுர மீட்டர் கட்டுமானம் அல்லது பழுதுபார்க்கும் பணி அல்லது 600 சதுர மீட்டர் இடிபாட்டுக் கழிவுகள் எனில், நாள் ஒன்றுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்.எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியை சுத்தமாகப் பராமரிக்க மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்படும்நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்து, மாநகராட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகளை வருகின்ற 21ம் தேதி முதல் கண்டிப்பாகப் பின்பற்றிட அறிவுறுத்தப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *