கொளப்பாக்கத்தில் மீண்டும் கொட்டப்படும் குப்பை குவியும் பறவைகளால் விமானங்களுக்கு பாதிப்பு?
சென்னை,சென்னை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள கொளப்பாக்கம் பகுதியில், மீண்டும் குப்பை கழிவு அதிகம் கொட்டப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள சென்னை விமான நிலையத்தை சுற்றி தரைப்பாக்கம், பொழிச்சலுார், கொளப்பாக்கம் ஆகிய பகுதிகள் உள்ளன.
கொளப்பாக்கம் அண்ணா பிரதான சாலை பின்புறத்தில் உள்ள காலி இடங்களில் அதிக மாமிச கழிவு, குப்பை, பிளாஸ்டிக் கழிவு எல்லாம் கொட்டப்படுகின்றன.
இதன் காரணமாக பறவை மற்றும் கால்நடைகள் அதிகம் வருகின்றன. உணவு தேடி வரும் பறவைகள், விமான நிலைய ஒடுபாதைக்கு சென்று, விமானங்களில் மோதினால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இதுகுறித்து, நம் நாளிதழில் கடந்த 27ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, கொளப்பாக்கம் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் வாயிலாக, அப்பகுதியில், 50 சதவீத குப்பை கழிவு அகற்றப்பட்டுள்ளது.
ஆனால், அதே இடத்தில் இருந்து சிறிது தள்ளி, மீண்டும் மூட்டை மூட்டையாக குப்பை கழிவு கொட்டப்பட்டு வருகிறது. இந்த கழிவு, விமான நிலைய பின்புறத்திற்கு மிக அருகில் உள்ளது.
இதுமட்டுமின்றி, மாடு மற்றும் நாய் அதே இடத்தில் இறந்துள்ளது. இவற்றை ஊராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர்.
இறந்த விலங்குகளின் உடல் மக்கி துர்நாற்றம் வீசுவதோடு, அவற்றை தேடி வரும் கழுகு உள்ளிட்ட பறவைகளால், விமானங்களுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது:
விமான நிலைங்களை சுற்றியுள்ள இடத்தில், குப்பை கொட்ட வேண்டாம் என பல முறை எச்சரித்தும், கொளப்பாக்கம் ஊராட்சியினர் உட்பட யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.
மாறாக, கொளப்பாக்கம் ஊராட்சியில் சேகரிக்கும் குப்பையை, ஊழியர்களே கொட்டிவிட்டு செல்வது அதிர்ச்சி அளிக்கிறது.
இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் பெரிய பாதிப்பு ஏற்படும். தமிழக அரசு, இந்த பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.