ஊரப்பாக்கத்தில் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை
சென்னை, மார்ச் 30: சென்னை அருகே நீட் தேர்வு பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி ஐயஞ்சேரி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பின்புறத்தில் பேக்கரி கடை வைத்துள்ளார். இவருக்கு மனைவி, 2 மகள்கள். இதில் மூத்த மகளான தேவதர்ஷினி (21) ஏற்கனவே 3 முறை நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றார். இந்நிலையில், வருகிற 4ம் தேதி மீண்டும் 4வது முறையாக நீட் தேர்வு எழுத உள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற வேண்டும், என்று இரவு, பகல் பாராமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில், நீட் தேர்வு நெருங்கும் நிலையில், மீண்டும் 4வது முறையாக எழுத உள்ள தேர்வில் பெயிலாகி விடுவோமோ என்ற பயத்தில் கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மின்விசிறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, தகவலறிந்த கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் கிளாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நீட் தேர்வு பயத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.