கொலைக்கு பழி வாங்க சதித் திட்டம் வீட்டில் வெடி குண்டுகள் பறிமுதல்
புழல், மார்ச் 30: ஆதம்பாக்கம் வாணுவம்பேட்டையில் கடந்த 26ம் தேதி பார்த்திபன் என்பவர் வீட்டின் அருகே புதைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை ஆதம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் பார்த்திபன் (27), ராபின்சன் (23) ஆகிய இருவரை கைது செய்து விசாரித்தனர். அதில், சோழவரம் அடுத்த ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த வினித் என்பவர் நாட்டு வெடிகுண்டை கொடுத்து வைத்ததாக தெரிவித்தனர். இதையடுத்து இருவரை சிறையில் அடைத்து பார்த்திபன் அளித்த தகவலின் பேரில் ஆதம்பாக்கம் தனிப்படை போலீசார் ஆந்திராவில் பதுங்கி இருந்த வினித் (23), அவரது கூட்டாளி முருகன் (20) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களது வீடு அமைந்துள்ள சோழவரம் ஆத்தூர் அழைத்து வந்தனர். அங்கு இருவரும் மறைத்து வைத்திருந்த 9 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கடந்தாண்டு சரித்திர பதிவேடு குற்றவாளியான தனது தம்பி தனுஷை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்ததாகவும், தக்க சமயம் பார்த்து தம்பி கொலைக்கு பழி தீர்க்க நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்ததாகவும் வினித் கூறியுள்ளார். பிறகு வினித்தை ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சோழவரம் போலீசார் முருகனிடம் விசாரித்து வருகின்றனர்.